2 கோடி பேரின் செல்போனுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி: பேரிடர் மேலாண்மை துறை அனுப்பியது

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான கனமழை குறித்து அங்குள்ள 2 கோடி பேரின் கைபேசிகளுக்கு எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் மே 21-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைமுதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணிநிலவரப்படி தூத்துக்குடியில் இடி, மின்னல் தாக்கியதில் ஒரு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடைகள் இறந்துள்ளதுடன், 7 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன.

கனமழை எச்சரிக்கை வந்துள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி மாவட்டஆட்சியர்களுக்கு ஏற்கெனவே கடந்த 15-ம் தேதி அறிவுறுத்தப்பட் டுள்ளது.

மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிமீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை மீன்வளத்துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும் பொதுமக்களுக்கு கடல் சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல்,கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 2 கோடி கைபேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் மே 18 மற்றும் மே 19-ம்தேதிகளில் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு மே 20-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும். சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாநில மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதுடன் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.