விசாகம் குருபகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரம். வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில்தான் முருகப்பெருமான் அவதாரம் செய்தார். உலகத்துக்கே குருவாக விளங்கும் பரமேஸ்வரனின் அம்சமாக விளங்கும் முருகப்பெருமான், தந்தைக்கே குருவாகி உபதேசம் செய்தவர்.
எனவே குருவின் நட்சத்திரத்தில அவர் அவதாரம் செய்தது மிகவும் பொருத்தமானது என்பார்கள் பெரியோர்கள். பெரும்பாலும் வைகாசி விசாகம் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது. ஆனால் சில ஆலயங்களில் பௌர்ணமியை அடிப்படையாகக் கொண்டும் வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு மே 22 ம் தேதி, மாலை 7.13 வரை சதுர்த்தசி திதியே உள்ளது. அதன்பிறகே பௌர்ணமி திதி வருகிறது. காலை 8.17 வரை சுவாதி நட்சத்திரம் உள்ளது. அதன்பிறகு நாள் முழுவதும் விசாக நட்சத்திரம் உள்ளது. எனவே வைகாசி விசாகம் கடைப்பிடிக்க மே 22 -ம் தேதியே உகந்த நாள் என்கிறார்கள் பெரியோர்கள்.
முருகப்பெருமானை இந்த நாளில் மனமுருகி வழிபட்டால் வாழ்வில் உள்ள தடைகள் விலகும். குறிப்பாக யாருக்கெல்லாம் செவ்வாய் சாதகமாக இல்லையோ அவர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டிய தினம் வைகாசி விசாகம். தற்போது செவ்வாய் மீன ராசியில் ராகுவோடு சேர்ந்து சஞ்சாரம் செய்கிறார். இந்த சஞ்சாரம் பல ராசிக்காரர்களுக்கு மிகுந்த தடைகளையும் தொல்லைகளையும் கொடுத்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் செவ்வாயின் சஞ்சாரத்தால் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். கடகம் செவ்வாயின் நீச வீடு. இவர்களுக்கு 9 -ம் வீட்டில் செவ்வாய் தற்போது அமர்ந்திருக்கிறார். எனவே குடும்பத்தில் பெரியோர்களின் ஆரோக்கித்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அஷ்டமாதிபதி. அவர் ஏழாம் வீட்டில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் இந்தக் காலத்தில் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே விவாதங்கள் வந்துவந்துபோகும். செவ்வாய் கன்னி ராசிக்கு மூன்றாம் வீட்டுக்கும் அதிபதி என்பதால் சகோதர வகையில் செலவுகள் பிரச்னைகள் இருந்த வண்ணம் இருக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு 2 – க்கும் 7 – க்கும் உரியவ செவ்வாய். இவர் 6 -ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பண விவகாரங்களிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை.
கும்பராசிக்காரர்களுக்கு 2 -ம் இடத்திலேயே ராகுவோடு செவ்வாய் அமர்ந்திருப்பது நல்ல பலன்களைத் தராது. பணவரவில் தடைகள்,குடும்பத்தில் தேவையற்ற சிக்கல்கள் போன்றவற்றல் மிகுந்த சிரமப்படுவார்கள்.
மீன ராசியிலேயே ராகு செவ்வாய் சேர்க்கை இருப்பதால் தேவையற்ற வம்புகள், உடலில் சின்னச் சின்ன அலர்ஜித் தொந்தரவுகள், முன்கோபம் போன்றவை மீனராசிக்காரர்களுக்கு வந்துபோகும். என்வே இந்த 5 ராசிக்காரர்களும் வைகாசி விசாகநாளில் முருகனை வழிபட சகல துன்பங்களும் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் நீங்கும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும் என்கிறார்கள் பெரியோர்கள்.
முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது எப்படி?
அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி முருகனை நினைத்துவழிபட வேண்டும். குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் தவிர மற்ற அனைவரும் நாள் முழுவதும் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் விசேஷம். விரதம் இருக்க இயலாதவர்கள் அரிசி சேர்க்காத உணவுகளை உட்கொள்வது நல்லது.
வீட்டில் ஒருமுறையாவது முருகப்பெருமானுக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி மலர்கள் தூவி வழிபடுவது சிறப்பு. செவ்வரளி போன்ற சிவப்பு நிற மலர்கள் சாத்தி வழிபட்டால் முருகனின் அருளால் செவ்வாயின் பார்வையால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். முல்லை, சாமந்தி, சூரிய காந்தி ஆகிய மலர்களும் விசேஷம்.
நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், வேல்மாறல் ஆகியவற்றைப் பாராயணம் செய்ய வேண்டியது அவசியம். காலை அல்லது மாலை ஏதேனும் ஒருமுறை ஆலயம் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்வது நல்லது.
மாதுளம் பழ முத்துகளால் வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். மாதுளம் பழங்களைப் பெண்கள் தானம் கொடுப்பது மிகச்சிறந்த பரிகாரமாகும்.
ஆலயங்களில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்கு பால், இளநீர் ஆகியன வாங்கிக் கொடுப்பதும் நல்லது.