சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் திட்டத்துக்காக கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணி மேற்கொள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
மெரினா கடற்கரையைப் போலவே எண்ணூர் தொடங்கி கோவளம் வரையிலான 20 கடற்கரைகளை மேம்படுத்தும் நோக்கில், ‘சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டத்தை’ சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) செயல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கடற்கரைப் பகுதிகளில் திறந்தவெளி பூங்கா, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான மைதானம், மரப்பாலம், கடல்காட்சிப் பாலம், ஆம்பி தியேட்டர் இருக்கைகள், நீர் விளையாட்டு, நடைபாதை, சைக்கிளிங் ட்ராக், கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், கடலோர சமூக மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு, மீனவ மக்களுக்கு வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதிசெய்யும் வகையில் மீனவ சமூகக்கூடம், கடல் அரிப்புத் தடுப்புச்சுவர், மீன் உணவு விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும், என்றும் சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி, சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் பணிகளில் சிஎம்டிஏ ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் சார்பில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இத்திட்டத்துக்காக ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் ஆமைகள் இனப்பெருக்க பகுதிகளில் கடற்கரை மணல் பகுதியை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில், ஈஞ்சம்பாக்கம் – அக்கரை கடற்கரை பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு எதிராக சரவணன் என்ற மீனவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாரயணா, உறுப்பினர் சத்தியகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த சிஎம்டிஏவுக்கு தடை விதித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.