ஈரானின் இடைக்கால அதிபராக முகமது முக்பர் நியமனம்

தெஹ்ரான்,

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி சென்றார். அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார்.

அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். வர்சகான் மற்றும் ஜோல்பா இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது.

இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் ஈரான் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 15 மணி நேரத்திற்குமேல் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அவருடன் சென்ற அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர் உள்பட 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இப்ராகிம் ரைசி மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நேற்று விபத்தில் ரைசியின் மரணத்திற்கு பின், பகிர்ந்து கொண்ட இரங்கல் செய்தியில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி இதனை அறிவித்தார். மேலும் ஈரானில் அதிபரின் மரணத்திற்கு 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கூறினார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பின் முதல் பதிப்பின் 130 மற்றும் 131 வது பிரிவின்படி (1979 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது), ஜனாதிபதி தனது சட்டப்பூர்வ கடமைகளை (அதாவது பணிநீக்கம், ராஜினாமா, நோய் அல்லது இறப்பு) நிறைவேற்ற முடியாவிட்டால் துணை அதிபர் தலையீடு செய்து அதிபரின் கடமைகளை ஏற்றுக்கொள்வார். இஸ்லாமிய உச்ச தலைவரின் ஒப்புதலுடன் இந்த பொறுப்புகளை துணை அதிபருக்கு மாற்றப்படும் என்றும் 50 நாட்களில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.