சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசின் 10 ஆண்டு கால பணிகள் பற்றிக் கூறாமல், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையே வசைபாடிக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.
சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகியவை மிகவும் வளமான மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இம்மாநிலங்களில் இன்னும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது அரசின் 10 ஆண்டு காலப் பணி குறித்துப் பேசாமல், நாள் முழுவதும் காங்கிரஸை வசைபாடிக்கொண்டே இருக்கிறார். தனது பணிக்காக வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக காங்கிரஸைத் தவறாக சித்தரிக்கிறார். இது நரேந்திர மோடியின் வழக்கமாகிவிட்டது.
53 ஆண்டுகளில் நான் பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், நரேந்திர மோடி போல் யாரும் பேசியதில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்களின் நகை, நிலம், எருமை மாடுகளை காங்கிரஸ் பறித்துவிடும் என்று நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார். எவ்வளவு காலம்தான் இப்படிச் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்துவீர்கள் என அவரை கேட்க விரும்புகிறேன்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள 5 நீதிகள் மற்றும் 25 உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். 30 லட்சம் அரசு வேலைகளை வழங்க பாடுபடுவோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் ரூ 400 ஆக வழங்கப்படும். நகர்ப்புற வேலை உறுதித் திட்டமும் தொடங்கப்படும்.
10 ஆண்டுகளில் விவசாயிகளையும் ராணுவ வீரர்களையும் மோடி ஏமாற்றிவிட்டார். ஒருபுறம், ஹரியாணா விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை மோடியிடம் தெரிவிக்க டெல்லியை நோக்கிச் சென்றபோது, அவர்கள் செல்லும் வழியில் ஆணிகளையும் கம்பிகளையும் போட வைத்தார். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியில், 750 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
இளைஞர்கள் ராணுவத்தில் சேரத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அக்னி வீரர் திட்டத்தை அறிமுகப்படுத்தி, நிரந்தரப் பணிக்கு நடைபெறும் ஆள்சேர்ப்புகளை நிறுத்தினார். அக்னி வீரர் திட்டத்தில் 22 வயதில் இளைஞர்களுக்கு ஓய்வு அளிக்கும் பிரதமர் மோடி, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் தனக்காக இன்னும் 5 ஆண்டுகள் கேட்கிறார். நம் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்க முடியாத ஒரு பிரதமரை இன்னும் 5 ஆண்டுகள் நாட்டை நடத்த விடலாமா?
இந்த முறை பாஜக ஆட்சி அமைக்கப் போவதில்லை. அதனால்தான் நரேந்திர மோடி இவ்வளவு பொய்களைச் சொல்கிறார். இண்டியா கூட்டணிக்கு மிகப்பெரும்பான்மை அளித்து நாட்டில் அமைதி, வளம் மற்றும் ஒற்றுமையை மக்கள் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தார்.