வாஷிங்டன்: காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் பேசிய ஜோ பைடன், “காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.
ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 1,200 பேரைக் கொன்று நூற்றுக்கணக்கான பிணைக் கைதிகளைப் பிடித்துச் சென்றவர்கள் ஹமாஸ் போராளிகள். இஸ்ரேலியர்களின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் ஆதரவு என்பது இரும்புக் கவசத்தைப் போன்றது.
“ஹமாஸ் தலைவர் சின்வார் மற்றும் ஹமாஸின் மற்ற கசாப்புக் கடைக்காரர்களை வெளியேற்ற நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம். ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதைச் செய்ய நாங்கள் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறோம்.
ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்டுள்ள நோயுற்ற, வயதான மற்றும் காயமடைந்த இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நின்றுபோயுள்ளன. எனினும், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியை நான் கைவிடமாட்டேன். அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.