சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் மேற்கூரை உட்புற சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இன்னொரு மூதாட்டி கை, கால், இடுப்பில் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், சேலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (62). இவர் சென்னை மேற்கு சைதாப்பேட்டை துரைசாமி தோட்டம் இரண்டாவது தெருவில் உள்ள தனது மூத்த சகோதரி கன்னியம்மாள் (76) வீட்டுக்கு கடந்த 18ஆம் தேதி வந்திருந்தார்.
இந்நிலையில் சகோதரிகள் இருவரும் நேற்று இரவு வழக்கம் போல் படுத்து தூங்கினர். இந்நிலையில் இன்று (மே.21) அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அவர்கள் வசித்த வீட்டின் தரைதளத்தில் உள்ள வீட்டின் மேற்கூறையின் உட்பகுதி சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. குறிப்பாக செல்லம்மாள் முகத்திலும் உடலிலும் சிமெண்ட் பூச்சு விழுந்ததால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் சகோதரியான கன்னியம்மாளின் வலது காலிலும் காயம் ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது சைதாப்பேட்டையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கன்னியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையில் சைதாப்பேட்டை காவல் நிலைய போலீஸாரும் சம்பவ இடம் விரைந்து வந்து செல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். சகோதரியின் வீட்டுக்கு விருந்துக்கு வந்த நிலையில் வீட்டின் மேற்கூரை உட்பகுதி இடிந்து விழுந்த சம்பவத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சைதாப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.