இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாட்டின் அரச நிதியை உகந்த மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிசெய்ய “பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்” மற்றும் “அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ” ஆகியவை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க,
நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த சட்டமூலங்களில் ஒன்று, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பாக முன்வைக்கப்படும் “பொருளாதார பரிமாற்றம் சட்டமூலம்”(Economic Transformation law) ஆகும்.
இந்த சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படியே இந்த சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது என்பதைக் கூற வேண்டும். கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும், மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில், நாட்டின் அரச நிதி முகாமைத்துவம் மிகவும் உகந்த நிலையில் பேணப்பட வேண்டும்.
இது தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பில் கவனம் செலுத்தி, அரச நிதியை முறையான முகாமைத்துவம் செய்வதற்காக “அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்” எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டு வேலைத்திட்டத்தில் இது தொடர்பில் எமக்கு சுட்டிக்காட்டப்பட்டது. நாட்டின் எதிர்கால நிதி நிர்வாகத்தில் இது மிகவும் முக்கியமான சட்ட மூலம் என்பதையும் கூற வேண்டும்.
இந்த இரண்டு சட்ட மூலங்களும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு சட்டமூலங்களிலும் பல தொழில்நுட்ப விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார போக்கை மாற்றாமல் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார பரிமாற்றம் குறித்த சட்ட மூலம் பற்றி மேலும் விளக்கினால், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது. 2023 இன் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் பொருளாதாரச் சுருக்கம் ஏற்பட்டது. ஆனால் நான்காவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5% எட்டப்பட்டது. அதனுடன், பொருளாதார நன்மை இந்த நாட்டில் மிகக் குறைந்த மட்டத்திற்கும் கிடைக்கத் தொடங்கியது.
மேலும், இந்த நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையை மேம்படுத்துவதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைப்பது, உலகளாவிய ஒத்துழைப்பை நன்கு பேணுவது மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியம். அது மாத்திரமன்றி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்களில் மாறுதல் போன்ற விடயங்களும் இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சர்வதேச வர்த்தகம், வர்த்தக ஒப்பந்தங்கள், காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டிய சட்டக் கட்டமைப்பு இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் புதிய பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுவது, போட்டித்தன்மையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது, சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவது, தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழுவை நிறுவுவது மற்றும் ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களை ஸ்தாபிப்பது குறித்து இந்த சட்டமூலம் ஊடாக கவனம் செலுத்தப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பாக பொருளாதார பரிமாற்றம் தொடர்பாக நாம் எடுத்த தீர்மானங்களுக்கு பாராளுமன்றம் அண்மையில் அங்கீகாரம் அளித்தது. 2022 இல், அரச கடன் விகிதம் 128% ஆக இருந்தது. 2032 ஆம் ஆண்டாகும்போது அது 95%க்கும் குறைவாக பேணப்பட வேண்டும்.
மேலும், மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் 34.6% ஆக இருந்த அரச நிதித் தேவையை 2032 ஆம் ஆண்டளவில் 13% க்கும் குறைவாக பேண வேண்டியது அவசியமாகும்.
கடன் சேவையும் மிக முக்கியமானது. கடனைச் செலுத்தக்கூடிய கடன் நிலைபேறான நாடாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றோம். 2022 இல் 9.4% ஆக இருந்த கடன் செலுத்தும் விகிதத்தை 2027 ஆம் ஆண்டாகும்போது 4.5% விகிதத்தை விடவும் குறைக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறான நாட்டிற்காக அடைய வேண்டிய குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு சவால்களுக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டிய சட்டமூலமாக இதனை அறிமுகப்படுத்தலாம்.
இந்தச் சட்டமூலங்கள் மூலம் இறுதியில், நிலைபேறான பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கும், கடன் கொடுப்பனவுகளை நிலைபேறான மட்டத்தில் பேணுவதற்கும், விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை முகாமைத்துவம் செய்வதற்கும், கொடுப்பனவு சமநிலையை நிர்வகிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத் திசை சரியாக வழிநடத்தப்படுவதை நாம் எதிர்பார்க்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
மேலும், அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஊடாக பாரிய கருத்தாடல் எழுந்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பலவீனங்களைக் கண்டறிந்து, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருத்தமான சட்டக் கட்டமைப்பை முன்வைப்பது இதன் மூலம் இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்” என்று பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.