“சையது கானின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன், எதற்கும் தயாராக உள்ளேன்..” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அன்னதான விழாவை தொடங்கி வைத்த ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி, நோய் தொற்று ஏற்படும் நிலையில் உள்ளது. கலைஞர் நூலகத்திற்குள் மீண்டும் மழைநீர் புகுந்துள்ளது, அதை குற்றச்சாட்டாக சொல்லவில்லை, பல கோடி ரூபாய் செலவு செய்த நூலகம் மக்களின் பயன்பாட்டுக்கு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓ.பி.எஸ் அதிமுக-வில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் சொல்லப்பட்டு ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது. தேனி சையது கான், நான் அடியாளாக இருந்தேன் என வாய் கூசாமல் சொல்லி இருக்கின்றார். அவருக்கு வரலாறு தெரியும், யாரையோ திருப்திபடுத்த அப்படி சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது தலைமுறையாக அதிமுக-வில் பணியாற்றி வருகிறேன். அருமை மாமா சையது கான் எதற்காக இப்படி சொன்னார் எனத் தெரியவில்லை, எழுதி கொடுத்ததை வாசித்தாரா எனவும் தெரியவில்லை.
நான் யாருக்கும் அடியாள் இல்லை, விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டும் தொனியில் சொல்லியிருக்கிறார், எந்த விளைவையும் சந்திக்க இந்த உதயகுமார் தயங்குவதும் இல்லை, பின் வாங்குவதும் இல்லை.
இதே மதுரையில் அழகிரி கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் எந்த கிராமத்திலும் நுழைய முடியாது என சொன்னார்கள், ஆனால் கிராமம் கிராமமாக சென்று இளைஞர் இளம்பெண்கள் பாசறையை அமைத்து ஜெயலலிதாவிடம் பாராட்டை பெற்றவன். உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்.
ஓ.பி.எஸ் என்பவரின் சுயநல எண்ணத்திலிருந்து அதிமுகவை மீட்டெடுப்பதற்கு, எங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். அவரிடமிருந்து அதிமுக காப்பாற்றப்பட்டது.
சையது கான் வைத்த சில கோரிக்கைகளை ஓபிஎஸ்-கே தெரியாமல் எடப்பாடியாரிடம் சொல்லி செய்து கொடுத்தேன், மீண்டும் இது போன்ற உளறல்கள் வெளியே வருமானால் உங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம், ஒருநாளும் அஞ்ச மாட்டோம். எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாச தொண்டர்களாக பணியாற்றுவோம் என்பதை திருத்தமாக சொல்லிக் கொள்கிறோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb