மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,021 கோடியாக உயர்வு

மதுரை: மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடியாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை அருகே தோப்பூரில் சுமார் 20 ஆண்டு கோரிக்கைக்கு பிறகு 222 ஏக்கரில் ‘எய்ம்ஸ்’ (அனைத்து இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம்) மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனாலும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கிய நிலையில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்கப்பட்டிருந்தது.

அந்நிறுவனம், கடன் வழங்குவதில் தாமதம் செய்ததால் கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை எனக்கூறப்பட்டது. மதுரையுடன் அறிவித்த பிற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகள், அதன்பிறகு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளும் கட்டி திறக்கபப்பட்டன. ஆனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு கட்டிடம் கட்டப்படாததால், இந்த மருத்துவக்கல்லூரி, தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தில் தற்போது நடந்து வருகுகிறது.

இந்நிலையில் ஜைக்கா நிறுவனம் கடன் தொகை வழங்கியதால் கடந்த 17 ஆகஸ்ட் 2023 அன்று மருத்துவமனை கட்டுமானத்துக்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. எல் அண்ட் டி (L&T Construction) என்ற நிறுவனத்துக்கு டெண்டர் எடுத்த கட்டுமானப்பணிகளை தொடங்கும்போது சுற்றுச்சூழல் அனுமதியை இன்னும் பெறவில்லை என்ற தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து கடந்த மே 2-ம் தேதி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக, மதிப்பீட்டு ஆய்வறிக்கையை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்திருந்தது.

திங்கள்கிழமை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளதால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதில், 870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பாறை கட்டிடம்., ஆய்வகக் கூடங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் 2160 கார்கள், 2090 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன காப்பகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அமைய உள்ளது.

ஆரம்பத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும்போது மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் திட்டமதிப்பீடு ரூ.1,264 கோடியாக இருந்தது. அதன்பின், ரூ.1,624 கோடி திட்டமதிப்பீடாக உயர்த்தப்பட்டது. ஜைக்கா நிறுவனம் நிதி வழங்க தாமதம் செய்ததால் கட்டுமானப்பணி தாமதமாகி திட்டமதிப்பீடு ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த திட்டமதிப்பீடு நிதி, மீண்டும் ரூ.2,021.51 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு வாரங்களில் கட்டுமான பணி தொடங்க உள்ள நிலையில் 33 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, ஹாஸ்டல் ஆகியவை கட்டுப்படுகிறது. முதல் 18 மாதங்களுக்குள் முதல்கட்ட கட்டுமான பணிகள் முடிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.