தமிழக காவல்துறையில் சிறப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். இவரின் முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன். இவர் தமிழக எரிசக்தித்துறையில் செயலாளராக இருந்து வருகிறார். ராஜேஷ் தாஸ், பீலா வெங்கடேசன் ஆகியோர் குடும்பத்துடன் கேளம்பாக்கம் தையூரில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தனர். ராஜேஷ் தாஸ், பணியிலிருக்கும்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். இது தொடர்பான வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. இந்தச் சூழலில் ராஜேஷ் தாஸும் பீலா வெங்கடேசனும் பிரிந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் எனவும் அவர் மாற்றிக் கொண்டார்.

பாலியல் வழக்கில் சிக்கிய ராஜேஷ் தாஸை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தனர். அதனால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட ராஜேஷ் தாஸ், கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பெற்றார். இந்தச் சூழலில்தான் ராஜேஷ் தாஸின் தையூர் பங்களா வீட்டின் மின் இணைப்பு கடந்த 20-ம் தேதி துண்டிக்கப்பட்டது.
அதற்கு ராஜேஷ் தாஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எரிசக்தித்துறையில் உள்ள பீலா வெங்கடேசன், தன்னுடைய அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துவதாகவும் ராஜேஷ் தாஸ் தரப்பு குற்றம்சாட்டியது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பீலா தரப்பு முழுமையாக மறுத்திருக்கிறது.
பங்களா வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “அந்த வீட்டில் பீலா வெங்கடேசன் பெயரில் மின் இணைப்பு (சர்வீஸ்) இருந்தது. அதனால் அவர், தனக்கு மின் இணைப்பு வேண்டாம் என்று எங்களுக்கு மனுக் கொடுத்தார்.

அதனடிப்படையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் வசிக்கும் ராஜேஷ் தாஸ், மின் இணைப்பு கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்தவித அதிகார துஷ்பிரயோகமும் இல்லை” என்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து ராஜேஷ் தாஸ், பீலா வெங்கடேசன் ஆகியோரிடம் விளக்கம் கேட்க அவர்களின் செல்போன் நம்பர்களில் தொடர்பு கொண்டோம். ஆனால் இருவரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb