தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, அந்நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி நேற்று முன்தினம் (மே 19) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, 50 நாட்களுக்கு தற்காலிக அதிபராக அந்நாட்டின் முதல் துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் சையத் அலி காமேனி நியமித்தார்.
50 நாட்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், தேர்தல் தேதியை முடிவு செய்வது தொடர்பாக தற்காலிக அதிபர் முகமது மொக்பர், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் மற்றும் நீதித்துறை தலைவர் கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே உள்ளிட்டோரைக் கொண்ட குழு அதிபர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டது. அடுத்தடுத்து இரண்டு முறை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஜூன் 28-ம் தேதி தேர்தல் நடத்துவது என முடிவு செய்துள்ளது. மூவர் குழுவின் இந்த முடிவை ஈரான் அரசு ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டின் பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதி தொடர்பாக நேற்று (திங்கள்) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஈரானிய சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது டெஹ்கான், கார்டியன் கவுன்சிலின் துணைத் தலைவர் சியாமக் ரஹ்பேய்காந்த் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான உள்துறை துணை அமைச்சர் முகமது தாகி ஷாசெராகி ஆகியோர் கலந்துகொண்டதாக பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மே 30 முதல் ஜூன் 3-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜூன் 12-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாள் தேர்தல் பிரச்சாரத்தை அடுத்து தேர்தல் நடைபெறும்.
இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ரெய்சியின் மறைவுக்கு நேற்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த இந்திய அரசு, இன்று ஒரு நாள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவித்தது. ரெய்சியின் இறுதிச் சடங்கில் இந்திய அரசு சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.