மத்தியப் பிரதேசத்தில் நர்சிங் கல்லூரிகளுக்கு சாதகமான ஆய்வறிக்கை வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக, சிபிஐ அதிகாரி உட்பட 13 பேரை சிபிஐ கைதுசெய்திருக்கிறது.
முன்னதாக, மாநிலம் தழுவிய அளவில் நர்சிங் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆய்வு நடத்துமாறு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நர்சிங் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ள, ஏழு முக்கிய குழுக்களையும், சிபிஐ அதிகாரிகள் அடங்கிய மூன்று முதல் நான்கு துணை குழுக்களையும் சிபிஐ அமைத்தது.
இத்தகைய சூழலில், ஆய்வின்போது நர்சிங் கல்லூரிகளுக்குச் சாதகமான ஆய்வறிக்கை வழங்க சிபிஐ அதிகாரி உட்பட துணைக் குழு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ-க்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவல் அடிப்படையில் நேற்று இதில் நடவடிக்கை எடுத்த சிபிஐ, அந்த சிபிஐ அதிகாரி உட்பட 13 பேரைக் கைதுசெய்தது. மேலும், இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து போபால், இந்தூர், ரத்லாம் மற்றும் ஜெய்ப்பூரின் 31 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், 4 தங்கக் கட்டிகள், 36 டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய சிபிஐ செய்தித் தொடர்பாளர், `பல்வேறு குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் கண்காணிப்பின்போது, சிபிஐ இன்ஸ்பெக்டர் ராகுல் ராஜ் உட்பட ஒரு துணைக் குழுவின் அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. இதில், லஞ்சம் வாங்கிக்கொண்டு நர்சிங் கல்லூரிகளுக்குச் சாதகமான ஆய்வறிக்கையை வழங்குவது கவனிக்கப்பட்டது. பின்னர், சிபிஐ-யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்கும் வகையில் சிபிஐ அதிகாரி ராகுல் ராஜ் மற்றும் பிற மூன்று சிபிஐ அதிகாரிகள் உட்பட 23 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
இதில், அனில் பாஸ்கரன் மற்றும் அவரின் மனைவி சுமா அனில் ஆகியோரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை ராகுல் ராஜ் சட்டவிரோதமாகப் பெறும்போது கையும் களவுமாகப் பிடிபட்டார். இந்த அதிரடி நடவடிக்கையில் ராகுல் ராஜ் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மே 29 வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.