சென்னை ஐஐடி வளாகத்தில் இசை ஆராய்ச்சி மையத்திற்கான அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த இசை ஆராய்ச்சி மையத்திற்கு ‘IITM – Maestro Ilaiyaraaja Centre For Music Learning & Research’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்ட இளையராஜா, இந்த ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அதுமட்டுமின்றி, இந்த இசை ஆராய்ச்சி மையத்திற்கு தனது இசைக் குறிப்புகளை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக இளையராஜா வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விழாவில் பேசிய இளையராஜா, இசையைக் கற்றுக் கொள்வது குறித்தும் தான் இசையைக் கற்றுக் கொண்ட அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
இது எனக்கு முக்கியமான நாள். “எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் இது. இசையைக் கற்றுக்கொள்ள சென்னை வந்தபோது எனக்கும், என் அண்ணன் பாஸ்கருக்கும் அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார். நான் பிறந்த ஊரில் எனக்கு இசை கற்றுக் கொடுப்பதற்கு யாரும் இல்லை, அதற்கான சூழலும் அங்கில்லை. இசையைக் கற்றுக்கொள்ள எங்கெங்கோ தேடித்தேடி அழைந்தேன். அன்று கிராமத்தில் இருந்து இசையைக் கற்றுக்கொள்ள எப்படி சென்னை வந்தேனோ, இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்.
தினந்தினமும் கற்றுக் கொண்டேயிருக்கிறேன். இன்று வரை என்னால் இசையைக் கற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒருவர் தண்ணீர் வேண்டுமென்று கேட்டால் அவருக்குத் தாகத்தை ஏற்படுத்துங்கள். அவர் நிச்சயம் தண்ணீரை தேடிக் கண்டுபிடித்துவிடுவார். தீராத தாகம்தான் எதையும் கற்றுக் கொள்வதற்கான வழி. அந்தத் தாகம் இருந்தால் நீங்கள் எதையும் சாதிக்கலாம். சாதித்துவிட்டால் சாதனையெல்லாம் சாதாரணாமாகிவிடும். எல்லோரும் என்னிடம் ‘நீங்க எப்படி நல்லா இசையமைக்கிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். இசை என்பது நான் சுவாசிக்கும் மூச்சைப் போல எனக்கு இயல்பாக வருகிறது. தீராத தாகத்துடன் தேடித்தேடி கற்றுக்கொண்டே இருந்தால் எதுவும் உங்களுக்கு இயல்பாக வந்துவிடும்.
உலகப் புகழ்பெற்ற இசைமேதையான மோசார்ட்டிற்குப் பிறகு அவரைப் பார்த்து 200 மோட்சார்ட்கள் உருவானார்கள். இந்த இசை ஆராய்ச்சி மையத்தில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும். ஒன்றுமே தெரியாமல் ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னால் எதையும் செய்ய முடியும் என்றால், கற்றுக் கொள்ள நல்ல சூழலைக் கொண்டிருக்கும் உங்களால் எதையும் செய்ய முடியும்.
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ என்றார் பாரதி. ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் அங்கு சேர்ப்பீர்’ என்று நான் சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.