சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு பட்டயப் படிப்புகளில் சேர இதுவரை 6,800 பேர் வரை விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,530 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் முதலாமாண்டு பட்டயப் படிப்புகளுக்கு இதுவரை 6,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், பகுதிநேர பட்டயப் படிப்புகளுக்கு 130 பேரும், நேரடி 2-ம் ஆண்டு படிப்பில் சேர 5,200 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 24-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tnpoly.in/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் வெற்றி பெற்றவர்கள் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கையில் சேர முடியும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
விண்ணப்பித்த மாணவர்களில் தகுதி பெற்றவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்டு சேர்க்கை நடத்தப்படும். மேலும், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.