ஆர்சிபிக்கு 'எமன்' எலிமினேட்டர் தான்… ஆனால் ராஜஸ்தான் அதைவிட பாவம் – வரலாறு இதுதான்!

RR vs RCB Eliminator IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பிளே ஆப் சுற்று தொடங்கிவிட்டது. கொல்கத்தா அணி ஹைதராபாத்தை குவாலிஃபயர் 1 போட்டியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது. இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. 

சிஎஸ்கே, மும்பை…

ஐபிஎல் பிளே ஆப் (IPL Playoff 2024) என்றாலே அனைவருக்கும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். ஏனென்றால் சிஎஸ்கே அணி விளையாடிய 15 தொடர்களில் (இந்தாண்டையும் சேர்த்து) 12 தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு வந்துள்ளது. 2020, 2022 மற்றும் 2024 என மூன்று முறை மட்டுமே சிஎஸ்கே (Chennai Super Kings) பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியிருக்கிறது. 12 முறை பிளே ஆப் சென்று, அதில் 10 முறை இறுதிப்போட்டி சென்று 5 முறை கோப்பையை சிஎஸ்கே வென்றிருக்கிறது. மறுபுறம் மும்பை (Mumbai Indians) அணியோ 10 முறை பிளே ஆப் சென்றுள்ளது. அதாவது 17 சீசன்களில் 10 முறை பிளே ஆப் சென்று 7 முறை வெளியேறியிருக்கிறது. அதுவும் 6 முறை இறுதிப்போட்டி சென்று 5 முறை மும்பை அணி கோப்பையை வென்றிருக்கிறது.

பிளே ஆப்பில் கேகேஆர்

சிஎஸ்கே, மும்பை அணிகளுக்கு பின் அதிக முறை இறுதிப்போட்டிக்குச் சென்ற அணியாக கேகேஆர் (Kolkata Knight Riders) தற்போது உள்ளது. அதாவது, நான்காவது முறையாக கேகேஆர் இறுதிப்போட்டிக்கு தற்போது தகுதிபெற்றுள்ளது. கேகேஆர் அணி 17 தொடர்களில் 8 முறை பிளே ஆப் சென்றுள்ளது. 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணி அதன்பின் கோப்பையை வெல்லவே இல்லை எனலாம்.

ஆர்சிபிக்கு எமன் எலிமினேட்டர்…

சிஎஸ்கே, மும்பை, கொல்கத்தா அணிகளை தொடர்ந்து அதிக முறை இறுதிப்போட்டிக்குச் சென்ற அணியாக பெங்களூரு அணி உள்ளது. ஆர்சிபி அணி (Royal Challengers Bengaluru) ஒன்பது முறை பிளே ஆப் சென்று மூன்று முறை இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது, இருப்பினும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. அதிலும் குவாலிஃபயர் போட்டிகளில் 5 முறை விளையாடி 2 முறை வெற்றி பெற்று, மூன்று முறை தோல்வியடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, பிளே ஆப் சுற்றில் மட்டும் 14 போட்டிகளில் விளையாடி 5இல் வென்று, 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

வெற்றியா… சொதப்பலா…?

அதேபோல், ஆர்சிபி எலிமினேட்டர்களில் (Eliminator) 2020, 2021, 2022 என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், 2015ஆம் ஆண்டு இதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைதான் எலிமினேட்டரில் வென்றது. அதனால், 2015ஆம் ஆண்டை போல் எலிமினேட்டரில் ராஜஸ்தானை பெங்களூரு அணி (RR vs RCB) இன்று வெல்லுமா அல்லது வழக்கம் போல் இன்றும் சொதப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எழுச்சி பெறுமா ராஜஸ்தான்?

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியை எடுத்துக்கொண்டால் எப்போதும் போல் சிறப்பான தொடக்கத்தை பெற்று கடைசி நேரத்தில் சொதப்பி வருகிறது எனலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 15 தொடர்களில் 6 முறை பிளே ஆப் சுற்றுக்கு வந்துள்ளது. அதிலும் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு வந்து ஒரு முறை கோப்பையை வென்றது. அதிலும் பிளே ஆப் சுற்றில் 9 போட்டிகளை விளையாடி 4இல் வெற்றியும், 5இல் தோல்வியும் அடைந்துள்ளது. 

மேலும் படிக்க | கேகேஆர் அணிக்கு இருக்கும் அதிர்ஷ்டங்கள்.. ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குதான் – ஏன் தெரியுமா?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.