சென்னை: இந்தியக் கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட இரண்டு ‘டோர்னியர் – 228’ ரக விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை வந்த இந்த விமானங்களுக்கு பராம்பரிய முறையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய படைப் பிரிவில் 2 அதிநவீன ‘டோர்னியர் – 228’ விமானங்கள் இணைக்கப்பட்டு, அதன் விமானப் படை பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் கான்பூரில் இருந்து இன்று சென்னை வந்தடைந்தன. இந்த விமானங்கள் பாரம்பரிய முறையில் நீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்ககப்பட்டது. கான்பூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் போக்குவரத்து விமானப் பிரிவில் இந்த விமானத்தில் தொழிநுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த விமானத்தில் அதிநவீன ஏவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் நவீன சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.கடலோரக் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணி, போன்ற முக்கியப் பணிகளுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்படும். இந்த விமானத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன், புதிய ஐந்து பிளேடு ப்ரொப்பல்லர், கண்ணாடி காக்பிட், 12.7 எம்எம் துப்பாக்கி, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவை புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் ‘மேக்-இன்-இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் விமான நிலையம் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் தடையற்ற வான்வெளி கண்காணிப்புக்காக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும் என பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.