காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நீடித்து வந்த வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகக் கோடை மழை வெளுத்து வாங்கிவருகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

காற்றழுத்தம் மேலும் வலுபெற்றுவருவதால் வரும் 24-ம் தேதிவரை தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழக, கர்நாடக, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
இந்த சூழலில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாகக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். மேலும் இது மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டு வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்று வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து உருவாகியிருக்கும் முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வரும் புதன் கிழமை முதல் வெள்ளிக்கிழமை (மே23-25) வரை தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும். அதற்கு அடுத்த இரண்டு தினங்களுக்கு (மே25-27) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88