புதுடெல்லி: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, கேரளாவில் வரும் மே 31-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான காலம் தென்மேற்கு பருவமழைக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக மே 31-ம் தேதியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் சராசரியாக 96 முதல் 104 சதவீத மழை பெய்யும். கடந்த 50 ஆண்டு சராசரியான 87 சென்டிமீட்டர் மழை பொழிவை இந்த ஆண்டு தாண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இதுதொடர்பாக பேசுகையில், “இந்த முறை கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமான தேதியில் தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி பருவமழை தொடங்குகிறது. இம்முறை ஒருநாள் முன்னதாக மே 31-ல் தொடங்குகிறது. இது முன்கூட்டியே இல்லை. வழக்கமான தேதிக்கு ஒருநாள் முன்னதாக தொடங்குகிறது. இதனால், பல தென்னிந்திய மாநிலங்களில் மழைப்பொழிவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை: முன்னதாக இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் கூறும்போது, “வலு குறைந்து வரும் எல்நினோ நிகழ்வு, இயல்பைவிட குறைவான வடகோள உறைபனிப்பகுதிகள், வலுவாகி வரும் நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருதுளை நிகழ்வு என பல சாதகமான காரணிகள் இருப்பதால், இந்த ஆண்டு இந்திய அளவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது” என்றார்.
வடமாநிலங்களில் வெப்ப அலை: தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் அதேவேளையில் வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் வடமேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.