கோவை: கோவையில் இன்று (மே 22) மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (மே 22) காலை முதல் மாலை வரை மழை பெய்யவில்லை. அதைத் தொடர்ந்து இன்று (மே 22) மாலை வழக்கம் போல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரம் மிதமான மழையாக பெய்தது. அதைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் சில மணி நேரம் கனமழை பெய்தது. சாயிபாபாகாலனி, மசக்காளிபாளையம், ராமநாதபுரம், காந்திபுரம், சேரன் மாநகர், பீளமேடு, சிங்காநல்லூர், அவிநாசி சாலையின் பல்வேறு பகுதிகள் என மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
மழையால் வழக்கம் போல், சாலையோரங்களில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் பின்புறம் உள்ள தனியார் மருத்துவமனை அருகே, சாலையோரம் இருந்த மரம் முறிந்து அவ்வழியாகச் சென்ற தண்ணீர் லாரியின் மீது விழுந்தது. இதில் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டனர். அதேபோல், செல்வபுரத்தில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பசுமை பந்தல் மேற்கூரை கழன்று விழுந்தது. சரவணம்பட்டி அருகேயுள்ள உடையாம்பாளையத்தில் காற்றின் வேகத்துக்கு ஒரு வீட்டின் மேற்கூரையிலிருந்த தகர சிமென்ட் சீட் பறந்து அருகிலிருந்த மின்கம்பத்தில் சிக்கியது. பின்னர், தீயணைப்புத்துறையினர், மின்வாரியத்தினர் அவற்றை அகற்றினர்.