“திமுக தலைவர் போல செயல்படுகிறார் வி.கே.பாண்டியன்” – பாஜக விமர்சனம்

புவனேஸ்வர்: “தமிழகத்தில் இருந்து ஒடிசாவுக்கு பணியமர்த்தப்பட்ட அதிகாரியான வி.கே.பாண்டியன், திமுக தலைவரைப் போல நடந்து கொள்கிறார்” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார்.

ஒடிசாவின் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தர்மேந்திர பிரதான், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும். தொடர்ந்து 25 ஆண்டுகலாக ஆட்சியில் இருந்து வரும் பிஜு ஜனதா தளத்தின் மோசமான செயல்பாடு காரணமாக மக்கள் அவநம்பிக்கை அடைந்துள்ளார்கள்.

அதேநேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால சிறப்பான செயல்பாடு ஒடிசா மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவைப் பொறுத்தவரை இவை இரண்டும் மிக முக்கியமானவை. எனவே, மிகவும் பொறுப்புடன், மக்கள் பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக முழுப் பெரும்பான்மையுடன் முதல்முறையாக ஆட்சி அமைக்கும். ஒடிசாவில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன.

வி.கே.பாண்டியன் ஒரு தலைவர் அல்ல. அவர் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டவர். 4.5 கோடி ஒடியா மக்களில் நவீன் பட்நாயக் யாரையும் நம்பவில்லை. அவர், தலைமைப் பதவியை வெளியாருக்கு அவுட்சோர்ஸ் செய்துள்ளார். வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். அவர் பிரிவினையை ஏற்படுத்துகிறார். திமுக தலைவரைப் போல அவர் செயல்படுகிறார்.

புரி ஜகந்நாதர் கோயில் கருவூல சாவி விவகாரத்தில், திருடர்கள் தற்போது சத்தம் போடுகிறார்கள். ‘ரத்னா பந்தரின்’ சாவியைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள், 4.5 கோடி ஒடியாக்களை தவறாக வழிநடத்தியவர்களாவர். அவர்கள், பிரதமரை இழிவாகப் பேசுகிறார்கள். இதுதான் அவர்களின் மனநிலை. ரத்னா பந்தரின் சாவியைக் கண்டுபிடிப்போம். பாஜக ஆட்சி அமைந்த உடன், ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இதற்கென ஒரு குழுவை நியமிப்போம். ரத்னா பந்தர் திறக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரத்னா பந்தரை திறக்க ஏன் அவர்கள் பயப்படுகிறார்கள்?” என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.