நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் 2024.06.07 தொடக்கம் 2024.06.22 வரை நடைபெறவுள்ளது.
திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் தனியார் பஸ் சேவைகளின் ஒருவழிக் கட்டணம் 187 ரூபா என தீர்மானிக்கப்பட்டது.
நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (21.05.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை காலை 6.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரையிலும் நடைபெறவுள்ளது.
கடற்போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள்,படகுகளை உரியமுறையில் பேணுவதுடன் படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துதல் மற்றும் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும்.
ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கள் விற்பனை நிலையம் திருவிழாக்காலத்தில் பூட்டப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தலுடன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த பிரதேச சபையினால் அடையாள அட்டைகள் வழங்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.
அத்தோடு குறிக்கட்டுவான் வீதி குன்றும் குழியுமாக உள்ளமையினால் அதனை சீர்செய்வது தொடர்பாகவும், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு, கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல், பாடசாலை மாணவர்களின் சாரணர் தொண்டர் சேவை, தரை மற்றும் கடற்போக்குவரத்து நேர அட்டவணையை காட்சிப்படுத்தல், மின்இணைப்பு, யாசகம் பெறுவோர் உள்வருவதை கட்டுப்படுத்தல், நடமாடும் வைத்திய சேவை, சுகாதாரம் மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், அம்புலன்ஸ் சேவை மற்றும் புனரமைக்கவேண்டிய வீதிகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.