சென்னை: நாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்ட நிலையில் அதற்கு காரணமான சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் நாகூர் பட்டினச்சேரி பகுதியில் சிபிசிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட, பயன்பாட்டில் இல்லாத கச்சா எண்ணெய் குழாயில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கடலின் சுற்றுச் சூழலும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகள் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக, எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கான காரணங்கள், அதனால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அப்பகுதியில் எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், மத்திய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் உள்ளிட்டோர் கொண்ட கூட்டுக்குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், “சுமார் 10 டன் அளவிலான கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. அவற்றை சிபிசிஎல் நிறுவனம் நவீன கருவிகள் மூலம் உறிஞ்சி அகற்றியது. சுற்றுச்சூழல் தாக்கம் ஏதும் ஏற்படவில்லை” என கூறப்பட்டிருந்தது.
“எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது அப்பகுதியில் சிபிசிஎல் நிறுவன குழாய்கள் அகற்றப்பட்டுவிட்டன. அதனால் வழக்கை முடித்து வைக்க வேண்டும்’, என்று சிபிசிஎல் நிறுவனம் கோரியிருந்து. அரசு தரப்பில்,‘சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் இதுபோன்ற செயல் தண்டனைக்குரியது. எனவே சிபிசிஎல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், “எண்ணெய் கசிவு ஏற்படுத்தியதற்காக சிபிசிஎல் நிறுவனம் ரூ.5 கோடியை அபராதமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு செலுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.