சென்னை: முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலோஷேத்ரா நடனப்பள்ளி மற்றும் கல்லூரியில் கடந்த 1995-2001 காலகட்டத்தில் பயின்ற தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி ஒருவர், அந்த கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீஜித் கிருஷ்ணாவை கடந்த ஏப்.22 அன்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஸ்ரீஜித் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விடுமுறை கால அமர்வில் நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “28 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் புகார் கொடுத்த அந்த மாணவிக்கு தற்போது 40 வயதுக்கு மேலாகியிருக்கும். புகார் கொடுத்தவரும் தற்போது இங்கு இல்லை.
தற்போது மருத்துவ ரீதியாக எதையும் நிரூபிக்க முடியாது. மனுதாரர் கைதாகி 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரிக்கவில்லை. பல மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த மாணவியைத் தவிர வேறு யாரும் புகார் அளிக்கவில்லை” என்றார்.
இதையடுத்து நீதிபதி, “கைதான ஸ்ரீஜித் கிருஷ்ணாவிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்றால் அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாமே?” என கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை தரப்பில், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும், ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும், இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு (மே 23) தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.