சென்னை: விரைவு ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக பெட்டியின் இருக்கைகளில் மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதை தடுக்க,சிறப்பு சோதனை நடத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
விரைவு, மெயில் ரயில்களில் ஒதுக்கப்பட்டுள்ள பொது பெட்டிகளில் ஒரு பெட்டி மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு என பிரத்யேகமாக தலா ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பெட்டி இருக்கைகளில், மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதாக புகார் வருகின்றன. இந்த புகார்களை தொடர்ந்து, அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், மாற்றுத் திறனாளிகளின் புகார்கள் குறித்து ரயில்வே வாரியம் எடுத்த நடவடிக்கை குறித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையம் சூமோட்டா வழக்காக விசாரணை செய்கிறது.
இதற்கிடையே, அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் ரயில்களில் மே 27-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை சிறப்பு சோதனை நடத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, கடந்த 6 மாதங்களாக, இந்த பெட்டிகளில் ஆக்கிரமித்து பயணித்தவர்கள் மீது ரயில்வே மண்டலங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து தட்சிண ரயில்வே தொழிற்சங்க மூத்த நிர்வாகி மனோகரன் கூறியதாவது: “மாற்றத் திறனாளிகளுக்கான பிரத்யேக ரயில் பெட்டிகளில் மற்ற பயணிகள் பயணம் செய்வதை தடுக்க 12 நாட்கள் சிறப்பு சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது. இதேபோல, முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல், ஆக்கிரமித்து பயணிப்போர் மீது ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.