சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட தனது எக்ஸ் தள பதிவை நீக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் நேற்று (மே.21) அனுசரிக்கப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டி பதிவிட்டார்.
தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின்போது மக்களுடன் எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு மேற்கோளாக “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என்று பதிவிட்டிருந்தார்.
செல்லூர் ராஜு திடீரென ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டியது தமிழக அரசியல் களத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. செல்லூர் ராஜு அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவின. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவோ, “ராகுல் காந்தியை செல்லூர் ராஜு பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசியல் ரீதியாக சொல்லியிருக்க மாட்டார். எனவே, அதை எங்களால் ஏற்க முடியாது. தேர்தல் காலத்தில் இப்படி சொல்லியிருக்க வேண்டியதில்லை. செல்லூர் ராஜு நல்ல மனம் கொண்டவர். அவர் எல்லோரையும் பாராட்டுவார்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையேதான், ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட தனது எக்ஸ் தள பதிவை நீக்கியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. சர்ச்சைகள் எழுந்த நிலையில், தனது பதிவை நீக்கியிருக்கிறார் செல்லூர் ராஜு.