தெஹ்ரான்,
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் உள்பட 9 பேர் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் அதிபர் ரைசி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
இந்தநிலையில், அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் அவரது குழுவினர் பலியாவதற்குக் காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணையை ஈரான் அரசு தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்தை விசாரிக்க உயர்மட்டக் குழுவின் தலைவராக ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி முகமது பாகேரியை நியமித்துள்ளதாக இர்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிகேடியர் அலி அப்துல்லாஹி தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி முடிந்ததும் விசாரணை முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இர்னா என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது.