கலிபோர்னியா: ஓபன் ஏஐ நிறுவனத்தின் ChatGPT-4o மாடலில் இடம்பெற்றுள்ள குரல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட தனது குரலை பிரதியெடுத்து பயன்படுத்தி உள்ளதை போல இருப்பதாக ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில், அவருக்கு ஆதரவாக ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட்-அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் டெலிவிஷன் மற்றும் ரேடியோ ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற நடிகர் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஏஐ தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல் திரைத்துறையை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஓபன் ஏஐ விவகாரத்தில் தனது குரல் பயன்படுத்தப்பட்டு உள்ளதை குறித்து ஸ்கார்லெட் ஜோஹான்சன் அதிருப்தி தெரிவித்ததை நடிகர் சங்க கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசியதற்காக அவருக்கு நன்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அவருக்கு தெளிவான விளக்கம் அவசியம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சம்பள உயர்வு மற்றும் ஏஐ அச்சுறுத்தல் போன்றவற்றை முன்வைத்து ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் படிப்பாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்துக்கு பிறகு அவர்களது கோரிக்கையை தயாரிப்பாளர்கள் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட்-அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் டெலிவிஷன் மற்றும் ரேடியோ ஆர்ட்டிஸ்ட் கூட்டமைப்பின் பங்கும் இருந்தது.
என்ன நடந்தது? அண்மையில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி-4o மாடலை அறிமுகம் செய்தது. இதில் நிகழ் நேரத்தில் சாட் பாட் உடன் சுவாரஸ்ய ஆடியோ உரையாடலை பயனர்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஜிபிடி-4o மாடலில் ப்ரீஸ், கோவ், எம்பர், ஜூனிபர் மற்றும் ஸ்கை என ஐந்து குரல்களை ஓபன் ஏஐ சேர்த்திருந்தது. இந்த குரல்கள் அனைத்தும் வாய்ஸ் ஆர்டிஸ்ட் உடன் இணைந்து ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கியதாக தெரிவித்தது.
இந்த சூழலில் இதில் ‘ஸ்கை’ வாய்ஸ் தனது குரலை பிரதி எடுத்தது போல இருந்ததாக ஸ்கார்லெட் ஜோஹான்சன் தெரிவித்தார். இது சர்ச்சையானதை அடுத்து அந்த குரலை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது ஓபன் ஏஐ.