திருமணம் தாண்டிய உறவு!
அது காதலோ, பெற்றோர் பார்த்துச் செய்வதோ, திருமணம் நடப்பதற்கு முன்னரே ’எக்காரணம் கொண்டும் திருமணம் தாண்டிய உறவில் சிக்கிக்கொள்ளக் கூடாது’ என்று இருவரும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். `ஐயோ… கல்யாணத்துக்கு முன்னாடியே எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையர் பத்தியெல்லாம் பேசலாமா’ என்று பதற வேண்டாம். இது காலத்தின் கட்டாயம். ஏனென்றால், `லைஃப் பார்ட்னருக்கு திருமணம் தாண்டிய உறவு இருக்கிறது’ என்று தெரிய வருவதும், `எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையர் இருக்கிறதோ’ என்ற சந்தேகமும்தான் இன்றைக்குப் பல விவாகரத்துகளுக்கான காரணம். காதல் திருமணங்களும் விவாகரத்து கேட்கின்றன; பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்களும் குடும்பநல கோர்ட் வாசலில் நிற்கின்றன. விவாகரத்துகள் சாமானியர்களின் வீடுகளிலும் நிகழ்கின்றன; வி.ஐ.பி-க்களின் வீடுகளையும் புரட்டிப் போடுகின்றன. நேற்று யோசித்து இன்று முடிவெடுக்கிற விஷயமல்ல விவாகரத்து. பல வருடங்களாக மனதுக்குள் அடிக்கடி எழுகிற விவாகரத்து நினைப்பை, ’அச்சச்சோ என்ன இப்படி நினைக்கிறோம்’ என்று மனதின் ஏதோவோர் இருட்டான ஆழத்துக்குள் புதைத்து வைத்துக்கொண்டே வருவார்கள். அடுத்து புதைக்க மனதில் இடமில்லாமல் போகும் ஒரு தருணத்தில் ’வேற வழியில்லை பிரிஞ்சுடலாம்’ என்று முடிவெடுத்து விடுகிறார்கள். ‘’ஈகோ காரணமாக நடப்பனவற்றைத் தவிர்த்து, விவாகரத்துக்கு மூன்று நியாயமான காரணங்கள் இருக்கின்றன” என்கிற சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் அவை பற்றி விரிவாகப் பேச ஆரம்பித்தார்.
’’உலகின் அத்தனை விஷயங்களுக்கும் `இப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்யக் கூடாது’ என்று சில விதிமுறைகள் இருக்கும். அதேபோல, திருமணத்துக்கென்றும் முக்கியமான மூன்று விதிமுறைகள் இருக்கின்றன. திருமணத்துக்கு முன்னரே இந்த விதிமுறைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை, திருமணம் செய்துகொள்ளவிருப்பவர்கள் பரஸ்பரம் பேசிக்கொள்ளவும் வேண்டும். திருமண விதிமுறைகள் பற்றி தெரியாதவர்களுக்குப் பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். ஆனால், இங்கு யாரும் திருமண விதிமுறைகள் பற்றி பேசுவதில்லை. பெற்றோர்களுக்கும் அவைபற்றி தெரிவதில்லை.
இருவருமே சமம்!
ஒரு திருமண பந்தத்தில் கணவன், மனைவி இருவருமே சமம் என்பதுதான் திருமண விதிமுறைகளில் முதலாவதும் முக்கியமானதும். அந்த விதியை மீறி ஒருவர் மற்றவர் மீது தொடர்ந்து அதிகாரம் செலுத்துவதும், மற்றொருவர் அடங்கியிருப்பதும் ஒரு திருமணத்தின் ஆயுளைக் குறைத்து, அதை விவாகரத்தை நோக்கிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடங்கிக்கொண்டே இருந்த நபர் என்றாவது ஒருநாள் வெறுத்துப்போய், `இந்த நபரை இதுக்கு மேலயும் பொறுத்துக்கணுமா’ என்று யோசித்துவிட்டால்..?
கணவரின் அடக்குமுறையைத் தாங்க முடியாமல், மகளுக்குத் திருமணம் முடிந்தவுடன் விவாகரத்துக்கு அப்ளை செய்த மனைவிகளும் இங்கிருக்கிறார்கள். நீ பாதி, நான் பாதி என்பதுதான் திருமண வாழ்க்கையின் அடிப்படை சூத்திரம். சில குடும்பங்களில், கணவன், மனைவி இருவருக்குமே ஒருவரையொருவர் சமமாக நடத்துவது எப்படி என்பது தெரியாமல் இருக்கலாம். அவர்கள் உளவியல் ஆலோசகர்களை அணுகலாம். `வீட்டின் பெரியவர்களைக்கூட அணுகலாமே’ என்று சிலருக்குத் தோன்றலாம். உளவியல் ஆலோசகருக்கு, சம்பந்தப்பட்ட கணவன், மனைவி குறித்து எந்த முன்முடிவுகளும் இருக்காது. ஆனால், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு, `என் பையன் நல்லவன்’, `என் பொண்ணு தப்பு பண்ண மாட்டா’ என்கிற முன்முடிவுகள் இருக்கும். இது பிரச்னையை அதிகப்படுத்துமே ஒழிய, சரி செய்யாது.
மூன்றாம் நபர் தலையீடு!
தம்பதிகளுக்கிடையே பிரச்னை ஏற்படுவதற்கும், பிரிவு ஏற்படுவதற்கும் இரண்டாவது காரணம், மூன்றாம் நபர் தலையீடு. ’மூன்றாம் நபர்’ என்பது ஒரு நாகரிக குறியீடுதான். நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், கணவன் மற்றும் மனைவியின் குடும்பத்தினர்தான் அந்த மூன்றாம் நபர்கள். தம்பதியரின் பர்சனலுக்குள் சம்பந்தமே இல்லாமல் நுழைந்து நியாயம் சொல்வது, குறை சொல்வது என்று இவர்கள் செய்யும் எல்லைதாண்டிய உறவு பயங்கரவாதங்களால் வெறுத்துப் போனவர்கள், இவர்கள் தரும் மன உளைச்சலிலிருந்து தப்பிக்க விவாகரத்தைத் தீர்வாக முடிவு செய்துவிடுகிறார்கள்.
திருமணம் தாண்டிய உறவு!
அது காதலோ, பெற்றோர் பார்த்துச் செய்வதோ, திருமணம் நடப்பதற்கு முன்னரே ’எக்காரணம் கொண்டும் திருமணம் தாண்டிய உறவில் சிக்கிக்கொள்ளக் கூடாது’ என்று இருவரும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். `ஐயோ… கல்யாணத்துக்கு முன்னாடியே எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையர் பத்தியெல்லாம் பேசலாமா’ என்று பதற வேண்டாம். இது காலத்தின் கட்டாயம். ஏனென்றால், `லைஃப் பார்ட்னருக்கு திருமணம் தாண்டிய உறவு இருக்கிறது’ என்று தெரிய வருவதும், `எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையர் இருக்கிறதோ’ என்ற சந்தேகமும்தான் இன்றைக்குப் பல விவாகரத்துகளுக்கான காரணம்.
எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தவறு இது. ஓர் உறவுக்குள் இருந்துகொண்டே, இன்னோர் உறவில் இருப்பதை உலகின் எந்தக் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அதுவொரு நம்பிக்கை துரோகம். தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவருமோ, ஏதோவொரு பலவீனமான தருணத்தில் வெளி நபருடன் நட்பு, அன்பு, நெருக்கம், காதல் என்று நெருங்கி விடலாம். மனதளவிலிருப்பது என்றாவது உடலளவிலும் நிகழ்ந்துவிடலாம். குடும்ப வாழ்க்கையிலும் தாம்பத்திய வாழ்க்கையிலும் சலிப்பு ஏற்படுவது எல்லோருக்கும் நிகழ்வதுதான். அவற்றையெல்லாம் தாண்டி, இப்படியோர் உறவுச் சிக்கலுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதில் தம்பதியர் தெளிவாக இருக்க வேண்டும். இதற்காகத்தான் திருமணத்துக்கு முன்னரே இதுபற்றி பேசி உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறேன்.
பிரிந்தால்தான் வாழ முடியும் என்ற இடத்தில் விவாகரத்து சரி. மற்றபடி, தவிர்க்க முடிந்த தவறுகள் காரணமாக விவாகரத்துகள் நிகழக்கூடாது” என்கிறார் டாக்டர் காமராஜ்.