மகாராஷ்டிராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 வயது சிறுவன், அவரின் தந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ரூ.2.5 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த Porsche காரில் மதுபோதையில் அதிவேகமாகச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் விசாரணையில், அந்த சிறுவன் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தான் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்காக தன் நண்பர்களுக்கு பாரில் (BAR) சரக்கு பார்ட்டி வைத்து மதுபோதையில் திரும்பியபோது விபத்து ஏற்பட்டது என்றும் தெரியவந்தது.
அதையடுத்து, உயிரிழந்தவர்களின் நண்பர் அளித்த புகாரின் பேரில் சிறுவனைக் கைதுசெய்த போலீஸார், சிறுவன் உட்பட சிறுவனின் தந்தை மற்றும் மதுபானம் வழங்கிய பார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இருப்பினும், விபத்து நடந்த அடுத்த 15 மணிநேரத்தில் சிறுவனுக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால், சிறுவனை மைனராகக் கருதாமல் 18 வயதுக்கு மேற்பட்டவராகக் கருதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், மைனர் சிறுவனின் ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்றும் சிறார் நீதி வாரியத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுவன் தரப்பு வழக்கறிஞர், `சிறுவனின் பெயர் இதில் தவறாக இணைக்கப்பட்டிருக்கிறது. அவரை ஜாமீனில் வெளியே விட்டால் ஆதாரங்களைச் சேதப்படுத்தவோ, நீதிமன்றத்தின் அதிகார வரம்பிலிருந்து தலைமறைவாக இருக்கவோ முயற்சிக்க மாட்டார். அதற்கான உத்தரவாதம் வழங்கவும் அவர் தயாராக இருக்கிறார். தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவார்’ என்று ஜாமீன் அனுமதி கோரி வாதாடினார்.
பின்னர், சிறுவன் தனது வாழ்க்கைக்கு பயனுள்ள தொழில் படிப்பில் கவனம் செலுத்துவார் உள்ளிட்ட உத்தரவாதத்தை அவரின் தாத்தா முன்வைத்ததைக் கவனித்த சிறார் நீதி வாரியம், சிறுவனுக்கு ஜாமீன் வழங்குவது நியமானது மற்றும் முறையானதே என்று கூறியது. இந்த நிலையில், சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஏழு நிபந்தனைகள் என்னென்னவென்று தகவல் வெளியாகியிருக்கிறது.
சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஏழு நிபந்தனைகள்!
ரூ.7, 500 மதிப்புள்ள இரண்டு பத்திரங்கள் கட்ட வேண்டும்.
சாலைப் பாதுகாப்பு குறித்து 300 வார்த்தைகளில் கட்டுரை எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் சென்று அனைத்து விதிகளையும் ஆய்வு செய்து, 15 நாள்களுக்குள் சிறார் நீதி வாரியத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
15 நாள்களுக்கு ஆர்.டி.ஓ அதிகாரிகளுடன் இருந்து போக்குவரத்து விதிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மதுப்பழக்கத்தைக் கைவிடுதல் தொடர்பாக கவுன்சலிங் செல்ல வேண்டும்.
சசூன் மருத்துவமனையில் மனநல மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று, 15 நாள்களுக்குள் சிறார் நீதி வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தேவைப்படும் நேரத்தில் சிறார் நீதி வாரியத்தில் சிறுவனைப் பெற்றோர் ஆஜர்படுத்த வேண்டும்.
என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb