Ricky Ponting Team India Head Coach: இந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரோடு அவருடைய ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், அவரது ஒப்பந்தம் அதன் நீட்டிக்கப்பட்டது.தற்போது அவருடைய பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு நிறைவடைகிறது. இருப்பினும், கடந்த முறையை போன்று இந்த முறை ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்றும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பொது விண்ணப்பம் வெளியிடப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்ததார்.
அதையொட்டி, பிசிசிஐ தரப்பில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்காததால் நிச்சயம் பயிற்சியாளர் மாற்றமடைய உள்ளார் என்பது மட்டும் தற்போது உறுதியாகி உள்ளது. வரும் மே 27ஆம் தேதிதான் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். அதன்பின், விண்ணப்பித்த நபர்களிடம் பிசிசிஐயின் கிரிக்கெட் வழிகாட்டுதல் குழுவில் உள்ள சுலக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே ஆகியோர் நேர்காணல் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிபட்ட பெயர்கள்
இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் வெளியானதில் இருந்து நாள்தோறும் விதவிதமான கணிப்புகளும், தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரிடம் பிசிசிஐ இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகினாலும் இதுகுறித்து யாரும் உறுதிப்படுத்தவில்லை. கம்பீர் மட்டுமின்றி ஐபிஎல் தொடர்களில் பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளர்களாக இருப்பவர்களின் பெயர்களும் இதில் அடிபட்டது. ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங், மகிலா ஜெயவர்தனே, ரிக்கி பாண்டிங் ஆகியோரும் இந்த பட்டியலில் இருந்தனர். இருப்பினும் இதுகுறித்து யாரும் வாய் திறக்காத நிலையில், ரிக்கி பாண்டிங் தற்போது இதுகுறித்து பொதுவெளியில் பேசியிருக்கிறார்.
ஐசிசி ஊடகம் ஒன்றில் பேசிய பாண்டிங்,”நான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க உள்ளதாக வெளியான தகவல்கள் என் கவனத்திற்கு வந்தன. இதுபோன்ற விஷயங்கள் நமக்கு தெரிவதற்கு முன்னரே சமூக வலைதளங்களில் வந்துவிடும்.இருப்பினும், ஐபிஎல் காலகட்டத்தில் நான் அதற்கு தயாராக இருக்கிறேனா என்பதை அறிய சில ஒருவருக்கு ஒருவர் இடையிலான உரையாடலே நடைபெற்றது.
‘வாழ்க்கைமுறைக்கு ஒத்துவராது’
தேசிய அணியின் மூத்த பயிற்சியாளராக இருப்பதில் நிச்சயம் மகிழ்ச்சிதான். ஆனால் என் வாழ்க்கையில் நான் கவனம் செலுத்தும் மற்ற விஷயங்களில் பிரச்னை வரும். நான் வீட்டில் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவழிக்க விரும்புகிறேன் . நீங்கள் இந்திய அணியில் வேலை செய்தால், ஐபிஎல் அணியிலும் இருக்க முடியாது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.அதனால் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாயிற்று.
மேலும், தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் என்பது வருடத்தில் 10 அல்லது 11 மாத வேலை இருக்கக் கூடிய ஒன்றாகும். நான் அதைச் செய்ய விரும்பினாலும், அது இப்போது எனது வாழ்க்கைமுறைக்கும் நான் மிகவும் ரசிக்கும் சில விஷயங்களுக்கும் பொருந்தி போகவே போகாது.வேறு சில பெயர்களையும் அதில் நான் பார்த்தேன். ஜஸ்டின் லாங்கரின் பெயர் நேற்று அடிபட்டது, ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் பெயர் கொஞ்சம் கசிந்தது, கடந்த இரண்டு நாட்களாக கவுதம் கம்பீரின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக அடிபட்டு வருகிறது. ஆனால் நான் கூறிய காரணங்களால் அது எனக்கு சாத்தியம் இல்லாதது என்று நினைக்கிறேன்” என்றார்.