அமோனியா வாயு கசிந்த விவகாரத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எண்ணூர் தனியார் உர ஆலையை தமிழ்நாடு அரசின் அனுமதிபெற்ற பின் செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என்ற தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு, எண்ணூர் பகுதி மக்களும் சூழலியலாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையிலுள்ள ‘கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட்’ நிறுவனத்திலிருந்து கடந்தாண்டு டிசம்பர் 26-ம் தேதி, விஷத்தன்மை கொண்ட அமோனியா வாயு கசிந்தது. இதனால் எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுக்கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. அமோனியா கசிய தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே கண்டறியப்பட்டதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இச்சம்பவம் நிகழ்ந்த மறுதினமே, உர ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர் எண்ணூர் பகுதி கிராம மக்கள். தென்மண்டல பசுமை தீர்ப்பாயமும் வழக்காக எடுத்துக் கொண்டு விசாரணை தொடங்கியது.
“உயிருக்கு ஆபத்தான ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும்” என்ற முழக்கத்தோடு எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் தொடர் போராட்டத்தை கிட்டத்தட்ட 5 மாதங்களாக மேற்கொண்டனர் கிராம மக்கள். நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதற்கிடையில் டிசம்பரில் விசாரணையைத் தொடங்கிய பசுமை தீர்ப்பாயம் தனியார் ஆலை, அப்பகுதி மக்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் வாதங்களைக் கேட்ட பிறகு, கடந்த மே 22-ம் தேதி தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது. அதில், “உர ஆலை தரப்பில் வழங்கப்பட்ட 5.93 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கும். மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம், மத்திய தொழிலக பாதுகாப்புத் துறை, இந்திய கடல்சார் வாரியம் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே, கோரமண்டல் உர ஆலையைத் திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
தனியார் உர ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் போராட்டக் குழுவினர். இது குறித்து நம்மிடம் பேசிய குமரன், “பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பில் எங்களுக்கு துளியும் உடன்பாடில்லை. டிசம்பர் 26-ம் தேதி ஊர்மக்கள் விழிப்புடன் இருக்கவில்லை என்றால், எங்கள் கிராமமே அழிந்திருக்கும். எனவே தமிழ்நாடு அரசு ஆலையைத் திறந்து மீண்டும் எங்கள் உயிரோடு விளையாடக் கூடாது. ஆலையை மூடவே வழிவகை செய்வோம் என சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் வடசென்னை எம்.பி உள்ளிட்டோர் வாக்குறுதி அளித்தனர். அதனையும் மீறி தமிழ்நாடு அரசு உர ஆலையைத் திறக்க அனுமதியளித்தால், பெரும் போராட்டம் வெடிக்கும்” என்றார் கொதிப்புடன்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவன் பேசும்போது, “குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து அமோனியா கசிவு என்பது சர்வ சாதரணமாக நடப்பதுதான், அதிகளவில் வெளியானதால் கடந்த டிசம்பரில் விவகாரம் வெளியே வந்திருக்கிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் பசுமை தீர்ப்பாயம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆனால் மாசுக் கட்டுபாட்டு வாரியம் உரிய ஆய்வுகளை நடத்தாமலேயே அறிக்கை சமர்பித்திருப்பதுதான் அப்பட்டமான உண்மை. இயல்பிலேயே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் படுமோசமாக இருக்கின்றன. எண்ணூரைச் சுற்றியுள்ள பல நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபடுவதாகச் சான்றுகள் இருக்கும்போதும், நடவடிக்கை எதையும் அவர்கள் எடுப்பதில்லை. இந்நிலையில் அந்த அமைப்பின் அறிக்கையை முதன்மையாக கொண்டு தீர்ப்பு வழங்கியிருப்பதில், நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பில்லை. அந்த நிறுவனத்தை நிரந்தரமாக தமிழ்நாடு அரசு மூட வேண்டும். போராட்டக் குழுவினருக்கு நா.த.க துணை நிற்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb