பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் இடையிலே, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் மோடி கூறியிருக்கும் விஷயங்களைக் கேட்டு பலரும் ஆடிப்போயிருக்கிறார்கள்.

அந்த பேட்டியில், ‘சாதாரண மனிதர்களைப் போல ‘பயலாஜிகலாக’ நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான். ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் ஆற்றல், சாதாரண மனிதர்கள் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இதைக் கொடுக்க முடியும்’ என்றார் பிரதமர் மோடி.
பிரதமரின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ‘டெஸ்ட் டியூப் பேபிக்குக்கூட தாய் தந்தையர் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, நான் பயலாஜிக்கலாகப் பிறக்கவில்லை என்று ஒருவர் கூறுவது தேர்தல் நேர பிதற்றல் அன்றி வேறில்லை’ என்றெல்லாம் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மதரீதியான வெறுப்புப் பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த நிலையில், அது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் புகார் அளித்தன. ஆனால், அந்தப் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டதே தவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ‘காங்கிரஸ் வெற்றிபெற்றால் அயோத்தியில் ராமர் கோவிலை இடித்துவிடுவார்கள்’ என்று பிரசாரம் செய்யும் அளவுக்கு பிரதமர் மோடி சென்றார்.
தற்போது, ‘நான் பயலாஜிக்கலாகப் பிறக்கவில்லை. கடவுள் என்னை அனுப்பிவைத்திருக்கிறார்’ என்றெல்லாம் மோடி பேசத் தொடங்கியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும் நிலையில், அது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.

“கடவுள், மதம் ஆகியவற்றின் பெயரால் இந்திய மக்களை ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் பிரதமர் மோடி இப்படியெல்லாம் பேசுகிறார். குறிப்பாக வடமாநில மக்கள், கண்மூடித்தனமான அளவுக்கு கடவுள் மீது பக்தி கொண்டவர்கள். அதேபோல, முஸ்லிம் வெறுப்பும் வடமாநிலத்தில் அதிகம். ஆகவேதான், இந்த இரண்டையும் ஓட்டு வாங்குவதற்கான ஆயுதங்களாக பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். ஓ.பி.சி மக்களுக்கான இடஒதுக்கீட்டை எடுத்து முஸ்லிம்களுக்கு கொடுக்கப்போகிறார்கள், எருமை மாட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்றெல்லாம் பிரதமர் பிரசாரம் செய்கிறார். இது, முஸ்லிம்கள் மீது ஏற்கெனவே இருக்கும் வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
அதன் தொடர்ச்சிதான் ‘நான் பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டவன்’ என்ற பிரதமரின் பேச்சு. பிரதமரின் அந்தப் பேச்சுக்கு முந்தைய நாள்தான், ‘பூரி ஜெகந்நாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்கர்தான்’ என்று பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளரான சம்பித் பத்ரா கூறினார். பிறகு, வாய்தவறி அப்படிச் சொல்லிவிட்டேன் என்று அவர் பல்டியடித்தார். இதையெல்லாம் திட்டமிட்டுத்தான் பேசுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்காமல், ‘நான் ஒரு அவதாரப்புருஷன்’ என்றெல்லாம் பேசுவது இந்திய மக்களின் பகுத்தறிவை இழிவுபடுத்தக்கூடிய ஒரு நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

அடுத்ததாக, ‘அந்தக் கடவுளே நான் தான்’ என்று மோடி சொல்வாரா? இது மக்களை ஏமாற்றக்கூடிய நடவடிக்கை இல்லையா? பா.ஜ.க வெற்றிபெறாது என்பது முதல் இரண்டு கட்டத் தேர்தலிலேயே உணர்ந்துகொண்ட பிறகுதான், பிரதமர் மோடியின் பிரசார உத்தி மாறத் தொடங்கியது. தோல்வி பயத்திலிருந்துதான் இப்படியெல்லாம் மோடி பேசிவருகிறார்” என்கிறார் ப்ரியன்.
மோடியின் இந்த கருத்து குறித்து வாசகர்களாகிய உங்கள் பார்வை என்ன?! கமெண்ட்டில் பதிவிடுங்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88