சென்னை: ‘தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழக விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழக அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை. தமிழகத்தின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கெனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழகத்துக்கு உடனடியாக அளிக்க வேண்டும்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.