சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் மாயமான 2 வயது பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் ரயில்வே போலீஸார் மீட்டனர். குழந்தையை வைத்திருந்த இருவரிடம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோதி பிந்த். இவரது மனைவி ஜோதிதேவி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிதேவி, சென்னை மேடவாக்கத்தில் கூலி வேலை செய்து வருகிறார். பிஹாரில் வசித்து வந்த மோதி பிந்த் தனது இரு குழந்தைகளுடன் வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்தார். குழந்தைகளை சென்ட்ரல் ரயில்நிலைய டிக்கெட் பதிவு அலுவலகம் அருகே ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு, குடிநீர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துவிட்டு திரும்பியபோது, ஒரு குழந்தை (2 வயது ஆர்த்தி குமாரி) மாயமாகி இருந்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மோதிபிந்த் பல இடங்களில் தேடினர். இருப்பினும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸாரிடம் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, குழந்தையை தேடினர். மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் தேடினர்.
அப்போது, ஒரு ஆணும்,பெண்ணும் குழந்தையை தூக்கிக் கொண்டு மூர்மார்க்கெட் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஆர்.பி.எஃப் போலீஸார், அவர்களை பிடித்து, குழந்தையை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து, ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில், குழந்தையை தூக்கிச் சென்றவர்கள் விஜயவாடாவைச் சேர்ந்த துர்கா (19), சித்தராமையா (18) என்பது தெரியவந்தது. அவர்கள் குழந்தையை கடத்தவில்லை என்றும், குழந்தையின் பெற்றோரை தேடியதாகவும் கூறினர். இருப்பினும், குழந்தையை வைத்திருந்தர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள், குழந்தையை கடத்தி செல்ல முயன்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.