திருவள்ளூர்: “கோயில் பராமரிப்பின்மை, சாலைகள் மோசம் இவை எல்லாம்தான் திராவிட மாடல் அரசு. தமிழகத்தில் போலி திராவிட மாடல் அரசு நடக்கிறது” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் உள்ள திருவுடையம்மமன் கோயிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சரும் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி நாட்டில் மிகப் பெரிய சீரழிவை செய்துள்ளது. அதனை சரி செய்ய பாஜக தலைமையிலான அரசுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டது.
ஆகவே, பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டு கால ஆட்சி டிரெய்லர் எனவும், இனிமேல் தான் மெயின் பிக்சர் எனவும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். மேலும், 2004-ம் ஆண்டுக்கு முந்தைய தங்களின் ஆட்சிக் காலங்களில் காங்கிரஸ் நாட்டில் எந்தவித வளர்ச்சியையும் செய்யவில்லை. 70 ஆண்டுகளாக ஏழ்மையை ஒழிப்பதாக நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் கூறி வந்துள்ளனர். ஆனால் அவர்கள் யாருமே ஏழ்மையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 25 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமை கோட்டுக்கு கீழிருந்து மேலே வந்துள்ளனர். கோயில் பராமரிப்பின்மை, சாலைகள் மோசம் இவை எல்லாம்தான் திராவிட மாடல் அரசு. தமிழகத்தில் போலி திராவிட மாடல் அரசு நடக்கிறது” என்று அவர் கூறினார்.