பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு தப்பியோடியுள்ள ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டுவரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு இரண்டாவது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேவகவுடாவின் மூத்த மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா (66) ஜாமீனில் உள்ளார்.
ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ள அதிகாரிகள், அவர் வைத்துள்ள தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இதே கோரிக்கையை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
தற்போது இரண்டாவது முறையாக பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டுவரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு இன்று எழுதிய கடிதத்தில், “கடுமையான குற்றங்களை செய்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் எழுந்துள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் பிரதமரின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, தான் செய்த கொடூரமான குற்றங்கள் குறித்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் D1135500 என்ற எண்ணைக் கொண்ட தூதரக பாஸ்போர்ட் மூலம் நாட்டை விட்டு வெளியேறியது வெட்கக்கேடானது.
நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் மற்றும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடப்பட்ட போதிலும் இன்றுவரை தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள எப்ஐஆர் ஆனது பாலியல் வன்கொடுமை, பாலியல் செயல்களை வலுக்கட்டாயமாக வீடியோ படம்பிடித்தது என பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் வகையிலான குற்றச்சாட்டுகளை கொண்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தை மிகவும் தீவிரத்துடன் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்” என்று சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.