புனே: கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனை மேஜராக கருத 90 நாட்கள் செயல்முறை உள்ளது என அவரது வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது: “குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், ‘மைனரா அல்லது மேஜரா’ என்பதை சிறார் நீதி வாரியம் தீர்மானிக்க 90 நாட்கள் செயல்முறை உள்ளது. சிறுவனை கைது செய்த 30 நாட்களில் குற்றப்பத்திரிகையை விசாரணை மேற்கொள்ளும் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் 60 நாட்களுக்கு உளவியல் ரீதியான பகுப்பாய்வு உட்பட சில நடைமுறைகள் உள்ளன. அதன் பிறகு தான் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை மேஜராக கருதலாமா என்பதை நீதி வாரியம் தீர்மானிக்க முடியும்” என கூறினார்.
முன்னதாக, விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு வழங்கிய நிபந்தனை ஜாமீனை புதன்கிழமை ரத்து செய்திருந்தது சிறார் நீதி வாரியம். ஜாமீன் வழங்கியது கடும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. வரும் ஜூன் 5-ம் தேதி வரையில் சீர்திருத்த முகாமில் சிறுவன் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சிறுவனை இந்த வழக்கில் மேஜராக (வயது வந்தவராக) கருத வேண்டுமென காவல் துறை தரப்பில் தொடக்கத்தில் இருந்தே தெரிவிக்கப்பட்டு வருவதாக புனே காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். விபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐடி ஊழியர்கள் அஸ்வினி மற்றும் அனீஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவன் மற்றும் அவரது நண்பர்களுக்கு மது வழங்கிய மதுபானக் கூடத்துக்கு மாநில கலால் துறை சீல் வைத்துள்ளது. மதுபானக் கூட ஊழியர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவன் ஓட்டி வந்த வாகனம் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.