மேட்டூர்: மேட்டூரில் துணை வட்டாட்சியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வருவாய்த் துறை அதிகாரிகள் 7 பேரிடம் மேட்டூர் போலீஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் மைக்கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ட சபரி (37). இவர் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நர்மதா (36). இவரும், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 27-ம் தேதி இரவு நர்மதா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நர்மதா மரணத்துக்கு அலுவலக ரீதியான துன்புறுத்தலும் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழக வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் அரசுக்கு புகார் அளிக்கப்பட்டது. நர்மதாவின் தாய் வெண்ணிலா, தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஆர்ஓ தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேட்டூர் போலீஸார் தற்கொலை குறித்து குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். தொடர்ந்து, நர்மதா பணியில் இருந்த போது, அவருடன் பணியாற்றிய, சார் ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் 7 பேருக்கு, மேட்டூர் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து, மேட்டூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், வருவாய்த்துறை அலுவலர்கள் 7 பேரிடமும், இன்ஸ்பெக்டர் அழகுராணி தனித் தனியாக விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.