சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வியாழக்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 5 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், 6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறுகிறது. அடுத்ததாக இறுதி கட்டத்தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை பொருத்தவரை முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை, அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு, 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்புடன், வேட்பாளர்களின் முகவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும், அப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். தேர்தல் பொது பார்வையளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள் இயக்கம், வாக்கு எண்ணிக்கைக்கான அடிப்படை ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.