இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
அடுத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்குச் சரியான நபரைத் தேர்வு செய்வது பிசிசிஐ முனைப்புக் காட்டி வருகிறது.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங், “தலைமைப் பயிற்சியாளராக இருந்தால் 11 மாதங்கள் வரை நான் பணியாற்ற வேண்டும். எனது தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது செட் ஆகாது” என்று கூறியிருந்தார்.
மற்றொரு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர், “பிசிசிஐ-யில் நிறைய அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக கே.எல். ராகுல் சொன்னதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன்” என்று கூறினார். இப்படிப் பலரும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகிய இருவரில் ஒருவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக்க பிசிசிஐ முனைப்புக் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
அதுமட்டுமின்றி இந்திய அணி வரும் உலகக் கோப்பைத் தொடரில் எந்த வீரரை எப்படிக் களமிறக்க வேண்டு என்றெல்லாம் பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து அறிவுரை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐ குழுவின் செயலாளரான ஜெய் ஷா, “பிசிசிஐ இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு எந்த ஆஸ்திரேலிய வீரர்களையும் அணுகவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இது பற்றிப் பேசியிருக்கும் ஜெய் ஷா, “இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு இந்தியாவைச் சேர்ந்த சரியான முன்னாள் கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்வதில்தான் பிசிசிஐ முனைப்புக் காட்டி வருகிறது. நாங்கள் ஆஸ்திரேலிய வீரர்களையோ, பிற வெளிநாட்டு வீரர்களையோ இதற்காக அணுகவில்லை. நம் நாட்டு வீரர்களுக்குத்தான் நமது வீரர்கள் பற்றியும், நமது இந்திய அணி பற்றியும் நன்கு தெரியும். அதனால், இந்தியாவைச் சேர்ந்தவர்களைத்தான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்குத் தேர்வு செய்வோம். இந்திய முன்னாள் வீரர்களின் ரேங்க் அடிப்படையில் இந்தத் தேர்வைச் செய்யவுள்ளோம். இதுதொடர்பாக பரவிவரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். அதிகாரபூர்வமான செய்தி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.
ஜெய் ஷாவின் இந்த விளக்கம் குறித்த உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.