ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கோப்பை வேட்கை கிட்டதட்ட 17 ஆண்டுகளாக தொடர்கிறது. பஞ்சாப் சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. இந்த ஆண்டு அந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றோடு நடையை கட்டிவிட்ட நிலையில், இதுவரை கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தங்களுடைய கடைசி லீக் போட்டியில் வீழ்த்தி ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணி சென்றது. ஏனென்றால் ஐபிஎல் முதல் பாதி தொடரில் அந்த அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று, ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தார்கள்.
ஆனால் இரண்டாம் பாதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எழுச்சி கண்டது. ஒவ்வொரு போட்டியும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த அணி, தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வாகை சூடி மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்திலும், பிரம்மிப்பிலும் ஆழ்த்தியது. இதனால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றிலும் ஆச்சரியத்தை நிகழ்த்தும் என எதிர்பார்த்தவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. பிளேஆஃப் சுற்றுக்கு நுழைந்ததையே அந்த அணியினர் சாம்பியன் கோப்பையை வென்றதைப் போல் கொண்டாடி தீர்த்தனர். அப்போதே பலரும் எச்சரித்தனர். இந்த விளம்பரத்தையெல்லாம் இப்போது காட்டாதீர்கள், பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்றுவிட்டு இறுதிப் போட்டிக்கு நுழைந்த பிறகாவது அலப்பறை செய்வதில் நியாயம் இருக்கிறது என கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் தொடங்கி எல்லோரும் எச்சரித்தனர்.
@GemsOfReplies) May 23, 2024
ஆனால் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றதால், நம்பிக்கையின் உட்சத்தில் ஆர்சிபி அணியும் அந்த அணியின் ரசிகர்களும் மிதந்தனர். எதிர்பார்த்தைப் போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோற்று, மீண்டும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது. ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறும் அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என்றால், பிளே ஆஃப் சுற்றோடு வெளியேறும் அணி என்ற முத்திரையை பெற்றுவிட்டது ஆர்சிபி.
இருப்பினும் அந்த அணியின் கம்பேக்கை பெருமைப்படுத்தும் வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ், எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், ஒரு ரசிகராக ஆர்சிபி அணியின் தோல்வி வலியை தரக்கூடியது என்றாலும், மே தொடக்கத்தில் எல்லோருமே நம்பிக்கை இழந்தபோது, நம்பிக்கையை ஏற்படுத்திய வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். நிச்சயம் அடுத்த ஆண்டு இன்னும் வலிமையோடு திரும்பி வந்து சாம்பியன் பட்டத்தை வெல்வீர்கள் என கூறியிருக்கிறார்.
இதற்கு ரிப்ளை கொடுத்துள்ள ரசிகர் ஒருவர், டிவில்லியர்ஸ் இந்த டிவிட்டை நீங்கள் பின் செய்து வைத்துக் கொள்ளுங்கள், ஆண்டுதோறும் எழுத வேண்டிய வேலையாவது மிச்சமாகும் என கிண்டலாக பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்த பதிவு இப்போது கிரிக்கெட் வட்டாரத்தில் வைரலாக பரவியுள்ளது.