உத்தரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவத்தில், பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
இந்தக் கொடூர சம்பவம் கடந்த 2020-ம் செப்டம்பர் 19-ம் தேதி படவுன் பகுதியில் நடந்திருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் பெயர் அனிதா, தாக்கிய கணவரின் பெயர் பன்னா லால். இந்த சம்பவத்தின்போது, அனிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அதோடு, அப்போது இருவருக்கும் ஐந்து பெண் குழந்தைகளும் இருந்தன.
ஆனால், பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என பன்னா லால் தன் மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்திருக்கிறார். ஆண் குழந்தை பிறக்கவில்லையென்றால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வேன் என அவரின் குடும்பத்தையும் மிரட்டிவந்தார். இப்படியான சூழலில், உள்ளூர் பூசாரி ஒருவர் அனிதாவுக்கு ஆறாவது குழந்தையும் பெண்தான் என்று கூறியதை நம்பி பன்னா லால் தன் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வயிற்றைக் கிழித்து உள்ளிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியப்போவதாக அனிதாவை பன்னா லால் மிரட்டினார். இதனால் அதிர்ச்சியில் அனிதா தப்பிக்க முயன்றபோது, பன்னா லால் அவரின் வயிற்றை அரிவாளால் வெட்டினார். இதையறிந்த அனிதாவின் சகோதரர் சம்பவ இடத்துக்கு வந்தபோது பன்னா லால் தப்பியோடிவிட்டார். பின்னர், போலீஸார் உடனடியாக அனிதாவை மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்து அவரைக் காப்பாற்றினர். ஆனால், அவரின் வயிற்றிலிருந்த ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
அதையடுத்து, பன்னா லால்மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 307 (கொலை முயற்சி) மற்றும் 313 (பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், தனக்கு நேர்ந்த கொடுமைகளை நீதிமன்றத்திலும் அனிதா தெரிவித்தார். அப்போது கூட, அனிதா தனது சகோதரர்களுடன் சொத்து தகராறில் இருந்ததால், பொய் வழக்குப் பதிவு செய்ய தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக பன்னா லால் நீதிமன்றத்தில் கூறினார். இந்த நிலையில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சவுரப் சக்சேனா தற்போது பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்.