புனே: “புனேவில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை சிறுவன் ஓட்டவில்லை என்றும், அதனை அவரது குடும்ப ஓட்டுநரே ஓட்டினார் என்றும் நம்பவைக்க முயற்சிகள் நடந்துள்ளன. சாட்சிகளைக் கலைக்க முயன்றதாக வழக்கு பதியப்படும்” என்று புனே காவல் ஆணையர் தெரிவித்தார்.
புனேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே.19) அன்று 17 வயது சிறுவன் ஒருவன் சொகுசு காரை ஓட்டி இருவர் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த வழக்கில் புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்தார்.
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் ‘Porsche Taycan’ சொகுசு காரை இயக்கிய 17 வயது சிறுவன் ஒருவர் விபத்தை ஏற்படுத்தினார். சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் அடுத்த 15 மணி நேரங்களில் அவர் நிபந்தனை ஜாமீன் பெற்றார். அது சர்ச்சையானது. அந்தச் சிறுவனுக்கு சமூக சேவை மேற்கொள்வது, போக்குவரத்து விழிப்புணர்வு கட்டுரை எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டதும் மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு வரும் ஜூன் 5-ம் தேதி வரையில் அவரை கண்காணிப்பு இல்லத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார், “இந்த வழக்கில் பிரபல கட்டுமான நிறுவன அதிபரின் மகன் அந்த சொகுசுக் காரை இயக்கவில்லை என்றும், அதனை அவர்களது குடும்ப ஓட்டுநரே இயக்கினார் என்றும் நிறுவ முயற்சிகள் நடைபெற்றுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது சாட்சிகளைக் கலைக்க முயன்றதாக சட்டப்பிரிவு 201-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
சிறுவனின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் சம்பவத்தன்று சிறுவனே காரை அவரது வீட்டில் இருந்து எடுத்தது உறுதியாகியுள்ளது. அதனால் காரை இயக்கியது சிறுவன்தான் என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் பப்-பில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளிலும் சிறுவன் மது அருந்துவதும் உறுதியாகியுள்ளது. ரத்த மாதிரி முடிவுகளைத் தாண்டியும் சிறுவன் மது அருந்தியதை உறுதி செய்ய எங்களிடம் சாட்சி இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியும் என்பதை இதன் மூலம் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.
மேலும் சிறுவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தவில்லை. தாங்கள் செய்வதை உணரும் அளவிலேயே மது அருந்தியுள்ளார். உயிருக்குச் சேதம் ஏற்படுத்தக்கூடிய விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்று தெரிந்துதான் காரை இயக்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் காவல் துறை தரப்பில் காட்டப்பட்ட சுணக்கம் என்னவென்பது விசாரித்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில் சிறுவன் காவல் நிலையத்தில் இருந்தபோது அவருக்கு பீட்சா, பர்கர் வழங்கப்பட்டது என்பதை ஏற்பதற்கில்லை” என்றார்.
இந்த விபத்தில் அனீஷ் அவாதியா (24), அஸ்வினி கோஸ்டா (24) என்ற இரு ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.