கொழும்பு நகரில் பல்வேறு வெசாக் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23) கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கங்காராம விகாரையின் வருகை தந்த ஜனாதிபதி, அங்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதுடன், கங்காராம விகாரையின் விகாராதிகாரி வண, கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், அங்கு சமய வழிபாடுகளை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு ஆசிர்வாதங்களை வழங்கினார்.

ஜனாதிபதி மின் விளக்குகளை ஒளிரவிட்டு “புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை” திறந்து வைத்தார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உட்பட உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பெருமளவான அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

கொழும்பு கங்காராம விகாரை, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் சிங்கப்பூரின் மகா கருணா பௌத்த சங்கம் இணைந்து புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு காலி முகத்திடல் ஷங்கிரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 23, 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வெசாக் மின்விளக்கு அலங்காரங்கள், வெசாக் தோரணங்கள், பக்தி கீத நிகழ்ச்சி, வெசாக் அன்னதானம், நாட்டுப்புற பாடல்கள், விளக்கு அலங்காரங்கள் உட்பட பல்வேறு கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வெசாக் நிகழ்ச்சியின் ஆரம்பத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவினால் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்ட பின்னர் வண்ணமயமான பக்திப் பாடல் நிகழ்ச்சி ஜனாதிபதி அலுவலக படிக்கட்டில் ஆரம்பமானது. இதேவேளை, ஷங்கிரிலா பசுமை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட வெசாக் அன்னதானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும், பேலியகொட சமூக அபிவிருத்தி அறக்கட்டளை, பேலியகொட நகர சபை மற்றும் வர்த்தக சமூகம் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த வெசாக் வலயத்தை நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

வண, பெங்கமுவே நாலக அனுநாயக்க தேரரின் வழிகாட்டலிலும், வண, கொட்டபொல மங்கள தேரர் மற்றும் வண, வெலங்கேபொல தம்மிக்க தேரரின் வழிகாட்டுதலிலும் இந்த வெசாக் வலயம் மே மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறுவதுடன், இதில் வெசாக் கூடுகள் போட்டி, பக்தி பாடல் நிகழ்ச்சி மற்றும் நாடக நிகழ்ச்சி, அன்னதானம் என்பன இடம்பெறும். மின்விளக்குகளை ஒளிரவிட்டு வெசாக் வலயத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, வெசாக் வலயத்திற்கு வருகை தந்திருந்த மக்களிடம் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, சிசிர ஜயக்கொடி மற்றும் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதேவேளை, வெசாக் பண்டிகையை முன்னிட்டு மருதானை – சுதுவெல்ல ஐக்கிய பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் வலயமும் கண்கவர் வெசாக் தோரணமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (23) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ தர்மாலோக தயா மகா விகாரையின் விகாராதிபதி வண, யடிஹேன சத்தாலோக தேரரின் அனுசாசனையின் பிரகாரம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவின் கருத்தின்படி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வெசாக் நிகழ்வு, பல விசேட அம்சங்களைக் கொண்டிருப்பதோடு, மணிக்கார குலுபகதிஸ்ஸ தேசிய கதையை தாங்கிய வெசாக் தோரணம் மே 27 ஆம் திகதி வரை மருதானை சந்தியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புப்படை பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விகும் லியனகே மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.