தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் நடந்த ரசாயன தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 7 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து இன்று மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதி தாசில்தார் விபத்து தொடர்பாக பேசுகையில், “விபத்துக்குள்ளான தொழிற்சாலை வளாகத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என நினைக்கிறோம். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். காயமடைந்த 64 பேர் ஆறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண்களும் அடக்கம். தொழிற்சாலையில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடு மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. சேதங்கள் மதிப்பிடப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பலரின் உடல்கள் கருகி அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தன. இதனால் சிரமங்கள் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக அமுதன் கெமிக்கல்ஸ் உரிமையாளர்களான மால்தி பிரதீப் மேத்தா, மலாய் பிரதீப் மேத்தா மற்றும் தொழிற்சாலையின் பிற அதிகாரிகள் மீது போலீஸார் கொலை வழக்கு உட்பட ஐபிசி 304, 324, 326, 285, 286, 427 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன