தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகக் கண்டறிந்து, அறிக்கை வழங்குவதற்காக ஜனாதிபதியில் செயலாளரின் தலைமையில் விசேட குழுக்கள் சில நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்று (23) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்றுமதி விவசாயக் கைத்தொழிலைப் பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான பங்களிப்பை வழங்கும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், தோட்டச் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பினரதும் இணக்கப்பாடு காணப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கொடுப்பனவின் போது ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவைச் சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார சிக்கல்களால் நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்ததாகவும், இவ்வாறு வாழ்க்கைச் செலவு அதிகரித்ததனால் அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு படிப்படியாக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது.
ஆனால் தனியார் துறை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு இடம்பெறவில்லை. இது தொடர்பாக தொழிற் சங்கங்கள் அடிக்கடி கோரிக்கை விடுப்பதுடன், அது தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
அதன் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களுக்காக உடனடியாக சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டதுடன், அது குறித்து சில தோட்டக் கம்பனிகளால் அவ்வாறு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையைக் கருத்திற்கொண்டு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி முன்வைத்த பின்வரும் யோசனைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சினால் தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மையில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களின் செல்வாக்கைக் கருத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆகக் குறைந்த சம்பளத்தை மதிப்பீடு செய்தல்
அவ்வாறே மதிப்பிடப்பட்ட சம்பளத்தை வழங்குதல் தொடர்பாக ஒவ்வொரு தோட்டக் கம்பனிகளினதும் இயலுமை தொடர்பாகக் கண்டறிவதற்காக குழுவொன்றை நியமித்தல்
அத்துடன், ஏதேனுமொரு கம்பனி அசாதாரண முகாமைத்துவத்தினால் சம்பளம் கொடுப்பதற்கு முடியாத நிலையில் காணப்படுமாயின், அவ்வாறான கம்பனிகளுடன் எதிர்வரும் காலங்களில் காணிக் குத்தகை ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கூடியதாக சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.