22 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காட்சியளிக்கும் இந்தக் கோசாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக் கப்படுகின்றன. இதற்கென 20-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் அமைக்கப் பட்டுள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட மரங்களுடன் பசுமையாகக் காட்சியளிக்கும் இந்தக் கோசாலையில் மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனமும் சாகுபடி செய்யப் படுகிறது.
மாடுகளின் கழிவுகளிலிருந்து பலவிதமான மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரிப்பதற்கான தொழிற்கூடம் ஒன்றும் செயல்படுகிறது. மாடுகள் பராமரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் பணிகளுக்காக 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இவ்வாறு பல வகைகளிலும் கவனம் ஈர்க்கும், கோகுல கிருஷ்ண கோசாலை, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தேவந்தவாக்கம் கிராமத்தில் இயங்கி வருகிறது. நடராஜன்-ஶ்ரீவித்யா தம்பதி இக்கோசாலையை நடத்தி வருகிறார்கள். கோசாலையின் ஒரு பகுதியில் வீடு கட்டி, வசித்து வருகிறார்கள் இத்தம்பதியர்.
ஒரு காலைப்பொழுதில் இங்கு நேரில் சென்றோம். நடராஜன், வடமாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார், ஶ்ரீவித்யா. “நானும், என் கணவர் நடராஜனும் பி.பார்ம் பட்டப்படிப்பு முடிச்சிருக்கோம். ஆனா, அது சம்பந்தமான வேலைக்குப் போகவோ, தொழில் செய்யவோ விருப்ப மில்லை. காரணம், எங்க ரெண்டு பேருக்குமே… பாரம்பர்ய நாட்டு மாடுகள் வளர்ப்புல ஆர்வம் அதிகம். இது எங்களோட சொந்த நிலம். 2007-ம் வருஷம், இந்தக் கோசாலையை என்னோட கணவர் தொடங்கினார். காங்கேயம், கிர், சாகிவால், காங்கிரேஜ், காஞ்சிக் குட்டை, உம்பளச்சேரி உள்ளிட்ட நாட்டின மாடுகள் வளர்த்துக்கிட்டு இருக்கோம். வெட்டுக்குப் போற மாடுகளையும் மீட்டெடுத்து வளர்த்துக்கிட்டு இருக்கோம். நல்ல நிலையில் உள்ள மாடுகளை அதுக்குரிய விலை கொடுத்தும் வாங்கிக்கிட்டு வந்து வளர்க்குறோம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் உட்பட பல மாவட்டங்கள்ல இருந்தும் நிறைய மாடுகள் விலைக்கு வாங்கியிருக்கோம். தங்களோட மாடுகளைப் பராமரிக்க இயலாத வங்க கொடுத்திருக்காங்க. கொரோனா ஊரடங்கு காலத்துல, தமிழ்நாட்டின் பல பகுதிகள்ல இருந்தும் நூற்றுக்கணக்கான மாடுகள், எங்க கோசாலையில வந்துச்சு.
ஆரம்பத்துல 4 மாடுகளோட தொடங்கப் பட்ட இந்தக் கோசாலையில, இப்ப மொத்தம் 1,146 மாடுகள் இருக்கு. இந்த ஊர்ல, அரசுக்குச் சொந்தமான 120 ஏக்கர் மேய்ச்சல் நிலம் இருக்கு. அதுல மாடுகளை மேய விடுவோம். மேய்ச்சல் முறையில வளர்க்குறதுனால மாடுகள் நல்லா ஆரோக்கியமா வளருது. தீவன பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, எங்க கோசாலையில பசுந்தீவனம் சாகுபடி செய்றோம். மாடு களுக்குத் தினமும் ஒருவேளை உலர் தீவனம், ஒருவேளை பசுந்தீவனம், ஒருவேளை வைக்கோல் உள்ளிட்ட அடர்தீவனம் கொடுக்குறோம். என்னதான் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டாலும் நாம கொடுக்கற ஊட்டமான அடர் தீவனங்களும் ரொம்ப முக்கியம். அரிசித்தவிடு, உளுத்தம்பொட்டு, கடலைப்பொட்டு, புண்ணாக்கு, கோதுமை, சோள மாவு, கேழ்வரகு, கம்பு… எல்லாம் சேர்த்து நாங்களே அடர் தீவனம் தயார் செய்றோம்.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரைக்கும், பெரும்பாலும் நாட்டு மருந்துகள்தான் பயன்படுத்துறோம். மாடுகளுக்குக் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் வந்தால்… வெற்றிலை, மிளகு, சீரகம், கல் உப்பு, மஞ்சள்தூள், நாட்டுச் சர்க்கரை… இதையெல்லாம் ஒண்ணா கலந்து அரைச்சு கொடுப்போம். கன்றுகுட்டிகளுக்குக் குடற்புழுக்கள் பாதிப்பு ஏற்பட்டுச்சுனா, அதை வெளியேற்ற ஆங்கில மருந்து கொடுப்போம். பெரிய மாடுகளுக்கு அது மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுச்சுனா, வேப்ப எண்ணெய் கொடுப்போம். வரும் முன் காப்போம் நடவடிக்கையாக மாதம்தோறும் வேப்பிலை கொடுப்போம்.
மடிநோய் வந்தா… கற்றாழை, மஞ்சள், சுண்ணாம்பு… இதையெல்லாம் சேர்த்து அரைச்சு போட்டுவிடுவோம். வயிற்று வழி, செரிமானக் கோளாறு மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டால், ஓமத்தை அரைச்சு தண்ணில கலந்து கொடுப்போம்’’ என்று சொன்ன வித்யா, பசுவின் பொருள்களைப் பயன்படுத்தி, இங்கு தயார் செய்யப்படும் பல வகையான மதிப்புக்கூட்டல் பொருள்கள் குறித்து விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘ஆரம்பத்துல திருநீறும், சாம்பிராணியும் தயார் பண்ணி விற்பனை செஞ்சுகிட்டு இருந்தோம். நாளடைவுல இதுமட்டும் போதாது… புதுமையா பல வகையான பொருள்கள் தயார் செய்யணும்ங்கற ஆர்வமும் தேடலும் அதிகமாச்சு. நாக்பூர், பெங்களூரு, கேரளா உட்பட இந்தியாவின் பல பகுதிகளுக்குப் போய், மதிப்புக்கூட்டல் தொடர்பா நிறைய பயிற்சிகள் எடுத்துக் கிட்டோம். 2016-ல மதிப்புக்கூட்டல் தொழிற்சாலையைத் தொடங்கினோம்.
பற்பொடி, ஊதுபத்தி, ஷாம்பூ, பாத்திரம் கழுவுற பொடி, சானிடைசர் உட்பட 40 வகையான பொருள்கள் தயார் பண்ணி விற்பனை செஞ்சுகிட்டு இருக்கோம். சாண விளக்கு, சாம்பிராணி, ஊதுபத்தி, வறட்டி உள்ளிட்ட பொருள்கள் செய்ய மெஷின்கள் வெச்சுருக்கோம். வறட்டி தயாரிப்பை பொறுத்தவரைக்கும், தனித்துவமான ஒரு வழிமுறையைக் கடைப்பிடிக்குறோம். 3 அங்குலம் தடிமன் கொண்ட வறட்டி, 4 அங்குலம் தடிமன் கொண்ட வறட்டி, 5 அங்குலம் தடிமன் கொண்ட வறட்டினு மொத்தம் 10 விதமானஅளவுகள்ல வறட்டி தயார் பண்ணி விற்பனை செய்றோம். வாடிக்கையாளர்கள், தங்களோட தேவைக் கேற்ப வாங்கிக்கிட்டு போறாங்க.
மாட்டுச் சாணத்துல செய்யும் விநாயகர் சிலை, விறகுக் கட்டை, வீடு கட்டும் கல்… இதெல்லாம், எங்களோட தயாரிப்புகள்ல, ரொம்ப ஸ்பெஷல். இந்தப் பொருள்களுக்கு இந்தியா முழுக்க பல பகுதிகள்லயும் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சாணத்துல தயார் செய்யப்படும் கல்லைப் பயன்படுத்தி வீடு கட்டினால், அது தரமா இருக்குமா? மழை பெய்ஞ்சா கல் ஊறிடுமோங்கற சந்தேகம் பலருக்கும் எழும். அதுமாதிரியான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சாணக்கல் பயன்படுத்தி, ஒரு வீடும்… மாட்டுக் கொட்டையும் கட்டியிருக்கோம். அதிகமா மழை பெய்ஞ்ச நேரங்கள்லகூட, ஒரு சிறு பாதிப்புகூட ஏற்படலை’’ என்று சொன்னவர், விற்பனை மற்றும் வருமானம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘மாடுகளைப் பராமரிக்க 41 பணியாளர்கள் வேலை பார்க்குறாங்க. மதிப்புக்கூட்டல் தொழிற்சாலையில 12 பணியாளர்கள் வேலை பார்க்குறாங்க. இவங்களுக்கான சம்பளம், தீவனம் உள்ளிட்டவைக்கு நிறைய செலவு செய்ய வேண்டியதிருக்கு.
நாட்டின மாடுகளைப் பாதுகாக்கணுங்கற நல்ல நோக்கம் கொண்ட சிலர் நன்கொடைகள் கொடுக்குறாங்க. ஆனா, அந்த நன்கொடை களை மட்டும் சார்ந்திருந்தால், இவ்வளவு பெரிய கோசாலையை வெற்றிகரமா நடத்த முடியாது. மதிப்புக்கூட்டல் மூலம், ஒரு மாசத்துக்கு எல்லாச் செலவுகளும் போக, 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. மதிப்புக்கூட்டல் பொருள்களை விற்பனை செய்றதுல எங்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுறதில்லை. சமூக ஊடகங்கள் மூலம் ரொம்ப எளிதா விற்பனை செய்ய முடியுது. எங்க கோசாலையில 1,146 மாடுகள் இருக்கு. இனிவரும் காலங்கள்ல இது பல மடங்குகளா பெருகணும்ங்கறது எங்களோட லட்சியம்’’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தொடர்புக்கு: நடராஜன்,
செல்போன்: 98433 16206
சாண கற்களுக்கு
சோலார் டிரையர்…
‘‘சாண கற்களை மழைக் காலத்துல தயாரிக்கறப்ப எப்படிக் காய நல்லா வைக்குறீங்கனு பலரும் கேட்குறாங்க. அரசு மானியத்துல சோலார் டிரையர் அமைச்சிருக்கோம். மழைக்காலத்துல மட்டுமல்ல… வெயில் காலத்துலயும்கூட, இந்த சோலார் டிரையர்லதான் சாண கற்களைக் காய வைக்குறோம்.
சாண கற்கள் தயாரிக்க, சோலார் டிரையர் ரொம்ப அவசியம். நேரடியா வெயில்ல காய வைக்கும்போது, சரியா காயலைன்னா பூஞ்சை வந்திடும். அதிகமா காய வச்சாலும் பாதிப்பு ஏற்படும். தரமான சாண கற்கள் கிடைக்க, பதம் ரொம்ப முக்கியம். அதுக்கு சோலார் டிரையர் ரொம்பவே உதவியா இருக்கு. வறட்டி காய வைக்குறதுக்கும் சோலார் டிரையர் பயன்படுத்துவோம்’’ என்கிறார் ஶ்ரீவித்யா.
படங்கள்: ச.பரத்வாஜ்