போர்ட் மோர்ஸ்பை: தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்பகுதி வாசிகள் அளித்த ஊடகப் பேட்டிகளில் 100க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். எத்தனை உயிரிழப்புகள் என்ற அதிகாரபூர்வ கணக்கு அரசுத் தர்ப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை.
ஆனால், சமூக ஊடக வைரல் வீடியோக்களில் மக்கள் கண்ணீர், கதறலுடன் மண்ணில் புதைந்த சடலங்களை எடுக்கும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. கிராமவாசிகள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றே கூறுகின்றனர்.