தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு வெற்றி கிடைக்கும் என கூறியிருந்தார்.
இதையடுத்து இவரை பாஜக.,வின் தேசிய செய்தி தொடர்பாளராக, பாஜக தலைவர் ஜே.பி நட்டா நியமித்துள்ளார் என்ற கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்திருந்தார்.
இதையடுத்து பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சூரஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ முரண்பாட்டை பாருங்கள்! காங்கிரஸ், ராகுல் காந்தி ஆகியோர் போலி செய்தியை பற்றியும், அதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் பேசுகின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சியின் தகவல்தொடர்பு பிரிவு தலைவரே, போலி ஆவணத்தை பகிர்ந்துள்ளார்’’ என கூறியுள்ளார்.
4-ம் தேதி தண்ணீர் பாட்டில் வைத்திருங்கள்: பிரசாந்த் கிஷோரின் கணிப்பை சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்திருந்தனர். அவர் பேட்டியில் தண்ணீர் குடிக்கும் காட்சியை வெளியிட்டு, இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் போது அவரது கணிப்பு தவறாக அமைந்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, பிரசாந்த் கிஷோர் நிலைகுலைந்தார் என குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ள பிரசாந்த் கிஷோர், ‘‘ தண்ணீர் குடிப்பது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. எனது தேர்தல் முடிவு கணிப்பால் கலங்கிப்போயுள்ளவர்கள், ஜூன் 4-ம் தேதி நிறைய தண்ணீர் பாட்டில்களை வைத்துக் கொள்ளுங்கள்’’ என கூறியுள்ளார்.